SUNDARAKANDAM SYNOPSIS IN TAMIL FOR DAILY RECITATION BASED ON SRI.ANNA’S UPANYASAM

sitaram

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

To recite Sundarakanda dhyana slokams and respective acharyars thanian before commencing and mangala slokams in the end)

The pdf link post is appended below for printing

SUNDARAKANDAM IN TAMIL .pdf

………..Yatra yatra Raghunatha Kirtanam… Tatra tatra kritha mastakanjalim Bhaspavaan paripoorna lochanam Marutim namata rakshasanthakam………………. ….. The Sundarakandam discourse notes ( Prose in tamil for daily recitation)

காண்டங்களில் மிகவும் அழகான காண்டம் இது .  எனவே சுந்தரகாண்டம் எனப்படுகிறது. “சுந்தரே சுந்தரம் சர்வம்”  என்றபடி இந்த காண்டத்தில் எல்லாமே அழகு.  விஷயமும் மிக அழகாக இருக்கிறது. சப்தாலங்காரமும் வர்ணனைகளும் கவிதா நயத்தைக் காட்டுகிறது.  எனவே காவ்ய நடையும் இந்த காண்டத்தில் அழகு. கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்து கஷ்டப்படும் போது , ஹனுமான் தூது சென்று இருவரையும் சமாதானப்படுத்தி நிம்மதி அளிக்கிறான்.  எனவே இது அழகான காண்டம். சுந்தர மூர்த்தியான ஹனுமானின் பெருமையை கூறுவதால் இது சுந்தர காண்டம்.  உலகையே மோஹிக்க செய்யும் பகவானாகிய இராமபிரானையும் மோஹிக்க செய்யும் அழகுடைய பக்தனான ஹனுமானின் பெருமையைக் கூறுவதால் இது சுந்தர காண்டம்.  ஏனெனில் பக்தனே சுந்தரன்.   பக்தியே சிறந்த சௌந்தர்யம்.

ஜாம்பவான் முதலிய வானர வீரர்களின் பிரார்த்தனையால் ஹனுமான் மந்தர மலையில் ஏறி இலங்கையை நோக்கி புறப்படலானார்.

ததோ ராவண நீதாயா: ஸீதாயா: சத்ருகர்ஸந :!    

இயேஷ பதமன்வேஷ்டும் சாரணசரிதே பதி!!

பிறகு சத்ருக்களை இளைக்கச் செய்யும் வீரனான ஹனுமான் ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையின் இருப்பிடத்தை சாரணர்கள் போகும் பாதையான ஆகாயத்தில் தேட விரும்பினார்.  கட்டும் காவலுமாய் ராவணன் இருக்கும் இடத்திற்கு ஹனுமான் தான் ஒருவனாகச் செல்லுகிறாரே! என்ன நேருமோ? என்று கவலைப்படும் பக்தர்களுக்கு ஸமர்த்தனாய் “சத்ருகர்சன” என்கிறார் வால்மீகி.  ஹனுமான் இங்கு கிளம்பியதுமே ராவணன் அங்கு இளைத்து போய்விட்டானாம்.” சாரணைசரித்தே பதி” என்னும் வாக்கியத்தால் தான் தனியாக புது வழி செல்லாமல், பூர்வாசார்யர்கள் சென்ற பாதையில் சென்றார் என்றார். “ சாரணர்கள்” என்றால் தேவர்களின் ஒரு சாரம் என்றபடி சாதாரண அர்த்தம். ஆச்சார்யர்கள் என்று விசேஷார்த்தம்.

 “ வந்தே குரு பரம்பராம்” என்றபடி பல ஆசார்யர்கள் முன்பு  போன பாதையில் போகிறவனுக்கு சம்பிரதாய பலத்தினால் பலப்ராப்தியில் பாதகமில்லை. தானே ஒரு பாதையில் போகிறவனுக்கு பலப்ராப்தியில் சந்தேகம். சாஸ்த்ரங்களை அறிந்த ஹனுமான் சம்பிராதயத்தில் சிறந்தவர் என்றாயிற்று. எனவே குரு பரம்பரையில் அவரும் ஒருவரானார். “ஹனுமத் ஸமேத குருணா” என்று ஆதர்ச குருவானார்.

சுந்தர காண்டத்தின் முதல் ச்லோகம் ஹனுமனை குரு தத்துவமாக விளக்குகின்றது.

பத்து தலையுடைய ராவணனே பத்து இந்திரியங்களை உடைய மனோ தத்துவமாவான். காமமும் க்ரோதமும் உள்ள ரஜோகுணமே ராவணன். தர்மமும் விஷ்ணு பக்தியுள்ள ஸத்வகுணமே விபீஷணன். தூக்கமும் சோம்பலும் உள்ள தமோகுணமே கும்பகர்ணன். இந்த மூன்று குணங்களையும் உடன்பிறந்ததாகக் கொண்ட மாயையை சூர்ப்பணகை. மாயா காரியமான பிரபஞ்சமே மாரிசன்.

ப்ரபஞ்சவஸ்துவை எப்போது ஜீவன் விரும்புகிறதோ அப்போது ஜீவன் ஈஸ்வரனை விட்டு பிரிய நேருகிறது. சீதையே ஜீவதத்துவம். ராமனே ஈஸ்வர தத்துவம். மாயா மானை விரும்பியத்தாலேயே சீதையாகிய ஜீவன், ஈஸ்வரனான ராமனை விட்டு பிரிந்தாள்.

ஸம்ஸாரமே சாகரம். அசோகவனமே குடும்பம். அதில் பந்தப்பட்டிருக்கிறாள் ஜீவனாகிய சீதை. குடும்ப ஸுகங்களில் மயங்கி கிடக்கும் ஜீவன் ஈஸ்வரனை அடைய மாட்டான். குடும்ப ஸுகத்தில் மயங்காமல் ஈஸ்வரனையே விரும்பி துடிதுடித்து அழும் ஜீவனே ஈஸ்வரனை அடைகிறான்.  எனவே சீதை இராவண கிருஹத்தில் எந்த ஸுகத்திலும் மயங்காமல் இராமனை நினைத்து துடிதுடித்து அலறுகிறாள்.  ஜீவனின் தாபத்தைவிட அவனை ரக்ஷிக்கிற விஷயத்தில் ஈஸ்வரனின் தாபமே சிறந்தது. எனவே ராமாயணத்தில் சீதையின் தாபத்தைவிட இராமனின் விரஹதாபமே மேலாக வர்ணிக்க படுகிறது.

ஜீவனையும் ஈஸ்வரனையும் கூட்டிவைப்பது ஆச்சார்யனே. ஆசார்யன்  பக்தி, வைராக்கியம் பரிபூர்ணனாகவும், குரு பரம்பரையில் வந்தவனாகவும், சம்சார சமுத்திரத்தைத் தாண்டக்க்கூடியவனாகவும், ஈஸ்வரனால் அனுப்பப்-பட்டவனாகவும், ஜிதேந்திரியனாகவும், திருமந்திரத்தை தருபவனாகவும் இருக்க வேண்டும். அரைகுறையான ஆசார்யனை விலக்கி பூர்ண குணமுடைய ஆச்சார்யனையே ஆச்ரியக்க வேண்டும்.  எனவே மைந்தன், த்வவிதன் போன்ற அரைகுறையாய் சமுத்திரத்தைத் தாண்டக்கூடியவர்களை விலக்கி, பூர்ணமாகத் தாண்டக்கூடிய திறமை சாலியான ஹநுமானை ஜாம்பவான் தேர்ந்தெடுத்தார்.

ஹனுமான் ராமபக்தியில் சிறந்தவர். சர்வ சாஸ்திரமும் அறிந்தவர்.  புலன்களை அடக்கியவர். வைராக்கிய பூர்ணர். ஸதாச்சாரமுடைய நித்ய ப்ரஹ்மசாரி. ராமனாலேயே அனுப்ப பட்டவர். பூர்வாசார்யர்கள் சென்ற பாதையிலேயே போகின்றவர். எனவே சகல ஆச்சார்ய லக்ஷணமும் ஹனுமானிடமே பொருந்தும்.

ஹனுமான் அநாயாசமாய் ஸம்ஸாரஸாகரத்தை தேடிச்சென்று ராம விரஹத்தால் துடிக்கும் சீதையாகிய ஜீவனுக்கு- தாரக மந்திரத்தை “ராம நாமாங்கிதம் சேதம் பச்ய தேவ்ய அங்குளீயகம்” என்றபடி உபதேசித்து இராமனின் கல்யாண குணங்களை எடுத்து சொல்லித் தேற்றுகிறார். பிறகு இராவணனுக்கு ராமதத்துவத்தை உபதேசித்து, இராமனின் கல்யாண குணங்களை எடுத்து சொல்லி, அந்த ஞானாக்னியாலேயே  ஸம்ஸாரமாகிய இலங்கையைப் பொசுக்கி, ஈஸ்வரனாகிய இராமபிரானை அழைத்து வந்து சீதையையும்- இராமனையும் கூட்டி வைக்கிறார். தான் செய்த ஆச்சார்ய க்ருத்யத்தாலேயே பரிபூர்ண சந்தோஷமடைந்து நிற்கிறார். இத்தகைய ஆச்சார்யனான ஹனுமானுக்கு கைம்மாறு செய்வது என்னவென்று அறியாமல் ஜீவனான சீதையும், ஈஸ்வரனான இராமனும் திகைத்து நிற்கின்றனர். இந்த நிலைமையில் தான் “நகுர்மி சத்ருசம் ப்ரியம்” என்று பெருமாளும் “நஹி பச்யாமி சத்ருசம்” என்று பிராட்டியும் சொல்லும் படியாக இருந்தது.

ஜீவன் ஆச்சார்ய சம்பந்தத்தாலேயே சம்சார துக்கம் நீங்கி ஈஸ்வரனை அடைகிறான் என்ற தத்துவத்தை ஸ்ரீமத் ராமாயணம் காட்டுகிறது. எனவே ஹனுமான் இங்கு குருதத்துவம் ஆவார்.  மேலே சரித்திரத்தை பார்க்கலாம்.

மகேந்திரமலையிலேறி ஹனுமான் தான் ஒரு மலை போன்ற பெரிய உருவத்தை தாங்கினார். அவருடைய பாரத்தினால் மலையே ஆடிற்று. மலையில் உள்ள மரங்களிலிருந்து புஷ்பங்கள் வீழ்ந்தன.

ஹனுமான் மேல் ரோமகூபங்களில் தொத்தி கொண்ட மலர்களால் அவர் புஷ்பமயமான மலைபோல் காணப்பட்டார். மலை ஆடியதும் அதிலிருந்த வித்யாதரர்கள், சித்தர்கள், சாரணர்கள் யாவரும் ஆகாயத்தில் சென்று ஹனுமானின் பெருமையைக் கண்டு புகழ்ந்தனர்.

ஹனுமார் குதூஹலத்தினால் தன் வாலை சுழட்டி மலையில் அடித்தார். உடனே மலையில் உள்ள ரத்னமயமான தாதுக்கள் போடி பொடியாகிக் காற்றில் பறந்து ஹனுமான் மேல் படிந்து பல வண்ணமாய்க் காட்சி அளித்தது.

அவர் தனது குருவான சூர்யனுக்கும், மஹேந்திரனுக்கும், பிதாவான வாயு பகவானுக்கும், பிரம்ம தேவனுக்கும் அஞ்சலி செய்தார்.” சீதாராம ஜகத்” என்ற பாவனையில் சர்வ பூதங்களுக்கும் அஞ்சலி செய்தார்.

பிறகு ஹனுமான் ஜாம்பவான், அங்கதன் முதலிய வானரர்களைப் பார்த்து சொன்னார் “ராம பாணத்தைப் போல் இதே வேகத்துடன் நானும் இலங்கைக்குச் செல்வேன். அங்கு சீதையை காணாவிடில் அதே வேகத்துடன் தேவலோகம் செல்வேன். அங்கும் காணாவிடில் ராவணனுடன் இலங்கையை பெயர்த்து எடுத்து வந்து விடுவேன். எப்படியும் காரியத்தை சாதித்து வருவேன் அன்றி என் முயற்சி வீணாகாது” என்று சொன்னார்.

வானரர்கள் ஹனுமானை “ஜெய ஜெய” என்று சொல்லிக் கொண்டாடினார்கள். இரு கால்களையும் மடித்து, இடுப்பை வளைத்து, இரு கைகளையும் நீட்டி மலையை ஒரு உந்து உந்திக்கொண்டு ஆகாயத்தில் ஆஞ்சனேயர் தாவினார். அவர் தாவிய வேகத்தில் மரங்கள் வேருடன் பிடுங்கிக் கொண்டு கூடச் சென்று கடலில் வீழ்ந்தன. ஒரு பந்துவானவன் ஊருக்குச் சென்றால் தீர்த்தக்கரை வரை கூடச் சென்று வழியனுப்ப வேண்டும் என்னும் தர்மத்தை அந்த மரங்கள் செய்வனப் போல் இருந்துது. ஹனுமானின் இரு கைகளும் பாம்பு போல் காணப்பட்டன.  அவருடைய வால் உயரத் தூக்கப்பட்டு இராமபிரானுக்கு ஜயத்வஜம் காட்டியது போல் தோன்றியது. மேகங்களில் நுழைந்தும், வெளிப்பட்டும் அவர்  சந்திரனைப் போல் காணப்பட்டார். நீலவர்ணமாயும், மஞ்சள் வர்ணமாயும் உள்ள மேகங்களையும் பார்த்துக் கொண்டே சென்றார். ஹனுமானுடைய இரண்டு கக்ஷங்களிலும் புகுந்து புறப்பட்ட காற்று “விர்” என ஓசையிட்டது. அவருடைய வேகத்தில் கடல் கிழிந்து தரைமட்டம் தெரியலாயிற்று.  தேவர்கள் அவரைப் புகழ்ந்தனர். சூரியன் மந்தமான வெய்யிலேயே அடித்தான். காற்று அனுகூலமாகவே வீசிற்று.

தன் வாசலில் இந்தகைய அதிதி போவதை சமுத்திரராஜன் கண்டார். அவரைப் பூஜிக்க விரும்பினார். முன்னொரு காலத்தில் பர்வதங்களுக்கு சிறகுகள் இருந்தனவாம். அவை பறந்து சென்று சில கிராமங்களில் உட்காருமாம். கிராமங்கள் அதனால் அழியலாயின. இதைக் கண்ட தேவேந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டினானாம். மைனாகம் என்கிற ஒரு மலை மட்டும் இந்திரனிடம் தப்பி ஸமுத்திரராஜனை சரணடைந்து விட்டது.  ஸமுத்திரராஜன் அதற்கு அபயம் அளித்து தனக்குள் வைத்து காப்பாற்றி வந்தான். இப்போது அந்த மலை அரசனைப் பார்த்து “ஹே மைனாக! நீ எனக்கு ஒரு உபகாரம் செய்வாயாக. அதிதிகளுக்குப் பூஜை செய்யும் பாக்கியம் கிடைப்பது அரிது. ஹனுமான் நம்மைத் தாண்டிச் செல்கிறார். அவருக்கு நீ சென்று பூஜை செய்து வா” என்றார். கடலரசனின் உத்தரவினால் மைநாகராஜன் வெளியில் புறப்பட்டான். மூன்று ஸ்வர்ண கலசங்களுடன் புறப்பட்ட மைனாகம், ஹனுமானை வழிமறித்துத் தனது பூஜையை ஏற்றுச் செல்லும்படி வேண்டிற்று.

மலையான விக்னம் வந்து விட்டது என்று நினைத்த ஹனுமான் தயங்கினார். உடனே பர்வதராஜன் சொன்னான்:-

பாமரனாயுனும் பசித்து வந்த அதிதியை பூஜிக்கத்தக்கவன்.  ஒரு மஹான் நமது பாக்ய விசேஷத்தால் நம் வீடு தேடி வந்தவிட்டால் கேட்கவும் வேண்டுமா?  அல்லும்  பகலும் இராமசேவையிலேயே ஈடுபட்டுள்ள பரமபாகவதரான உம்மைப் போன்ற அதிதி கிடைப்பது பாக்கியமல்லவா ? தர்மம் அறிந்த நான் இந்த பாக்கியத்தை இழப்பேனோ? எனவே என்  பூஜையை ஏற்க வேண்டும் என்றார்.

தனது காரியமே குறியான ஹனுமான் சீதையைக் காணாமல் திரும்பி சென்று இராமனை சமாதானம் செய்யாமால் சாப்பிட விரும்பவில்லை. அன்புடன் அழைக்கும்  பர்வதராஜனை மீறுவதும் உசிதமில்லை.

எனவே பர்வதராஜனைக் கையால் தொட்டு உபசாரம்  செய்துவிட்டு மேலே சென்றார்.

இவ்வாறு தங்குவதற்கு இடமும், திண்பதற்கு ஆகாரமும் கிடைத்தும் ஹனுமான் அதில் நாட்டமின்றி வெளியேறவே, தேவர்களுக்கு ஹனுமானின் பல பராக்கிரமத்தைக் கண்டு ஆச்சர்யம் உண்டாயிற்று.  எனவே ஹனுமானை பரிக்ஷிக்கும்படி தக்ஷனின் பெண்ணும் ,  நாகர்களின் மாதாவான சுரஸையை ஹனுமானை பரீக்ஷிக்கும்படி ஏவினார்கள். அவளும் ஹனுமானை வழிமறித்து, வாயைப் பிளந்துக் கொண்டு விழுங்க வந்தாள். ஹனுமான் அவளை பார்த்து, தான் இராம கைங்கர்யம் செய்ய வேண்டிப் போவதால் வழிவிடும்படி சொன்னார்.  அதற்கு அவள் தனக்கு வெகு நாட்கள் ஆகாரம் கிடைக்காமல் இருந்து இப்போதுதான் கிடைத்திருப்பதால் விட முடியாது என்றாள். அப்படியாகில் இராம கைங்கர்யம் முடித்து வந்து சுரசைக்கு ஆகாரமாகத் தானே ஆகிவிடுவதாக ஹனுமான் கூறினார். இந்த வழியாக எந்தப் பிராணி சென்றாலும் நீ ஆகாரமாய்க் கொள்வாயாக என்று ப்ரஹ்மதேவன் வரம் கொடுத்திருப்பதால், அந்த வரம் பொய் போகக்கூடாது என்றாள் சுரஸா. அப்படியாகில் என் அளவிற்கு தக்கபடி வாயைப் பிள என்று ஹனுமான் சொன்னார். ஸுரஸா பத்து யோஜனை தூரம் வாயைப் பிளந்தாள். ஹனுமார் 20 யோஜனை தூரம் வளர்ந்தார். இப்படியே ஸுராசாவின் வாயைவிட பெரிதாக ஹனுமார் வளர்ந்து கொண்டே இருந்தார். ஸுரஸா 1௦௦ யோஜனை அளவிற்கு வாயை பிளந்தவுடன் , இது தான் தக்க சமயம் என்று நினைத்து எதிர்பாராமலேயே சிறு கட்டை விரலளவு தன் உருவத்தை சுருக்கிக் கொண்டு அவள் வாயில் நுழைந்து பல்லில்  படாமல் மூக்கு துவாரத்தின் வழியாக ஆகாயத்தை அடைந்து கை குவித்து வினயமாக பேசினார்.  “ஹே தக்ஷகுமாரி! உனக்கு வந்தனம். நானும் வாயில் புகுந்து விட்டேன். ப்ரம்மாவின் வரமும் உண்மையாயிற்று.  சீதையை தேடி செல்லுகிறேன். விடை தருக” என்றார்.  ஸுரஸா ஸந்தோஷம் அடைந்தாள். ஹநுமானை மெச்சி வெற்றி அடையும்படி ஆசீர்வதித்து அனுப்பினாள். ஹநுமானுக்கு அதே வேகத்துடன் புறப்பட்டார் .

ஸிம்ஹிகா என்ற ஒரு அரக்கி நடுக்கடலில் இருந்து வந்தாள். அவள் ஆகாயத்தில் செல்லும் பிராணிகளின் நிழலைப் பிடித்து உறிவாள். உடனே அந்தப் பிராணி அவள் வாயிக்குள் விழுந்து விடும். அவள் ஹனுமானின் நிழலையும் பிடித்து உறிந்தாள். உடனே ஹனுமானின் வேகம் குறைந்தது. சிம்ஹிகையின் வாயைப் பார்த்தார் ஹனுமான். சுரஸையிடம் தப்பிய ஹனுமாருக்கு மீண்டும் ஒரு விபத்து. அவரோ கவலைப்படவில்லை. அவள் வாயில் விழுந்து விட்டார். அவளும் உடனே விழுங்கி விட்டாள். அவள் வயிற்றை கிழித்துக் கொண்டு ஹனுமான்  வெளியேறினார். தேவர்கள் மலர்மாரிப் பொழிந்தனர்.”

ஹனுமானே!! உம்மைப் போல் தீர்க்க தர்சனமும், புத்தியும், சாமர்த்தியமும், தைரியமும் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் எந்த வேலைகளிலும் தளர்ச்சி அடைய மாட்டார்கள்” என்று துதித்தனர்.

இவ்வாறு ஹனுமான் பல உருவங்களைத் தாங்கி, பல சோதனைகளை வென்று சௌக்கியமாய் கடலைத் தாண்டி இலங்கையில் உள்ள சுவேல பர்வதத்தில் குதித்தார் . செய்தற்கரிய செயலைச் செய்து விட்டதால் தனக்கு தானே உகப்பு அடைந்தார். பிறகு தன்னை சமாதானம் செய்துக் கொண்டு, மேலே நடக்க வேண்டிய காரியத்தை ஆலோசிக்கலானார்.  சீதையை பார்த்து விடுவது கடலைத் தாண்டியதை விட ஆச்சர்யமான காரியம். அது எப்படி கைக்கூடும்? என்று சிந்திக்கலானார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இருப்பது பிறருக்கு சந்தேகத்தைத் தரும் என்று நினைத்து ஒரு பூனை அளவிற்கு ரூபத்தைக் குறுக்கிக் கொண்டு இரவு வேளையை எதிர்பார்த்து ஒரு மரத்தில் தங்கியிருந்தார்.

ஹனுமான் சீதையை தேடுதல்

அன்று பௌர்ணமி நிலவு கிளம்பி விட்டது. அதுவும் கடலில் சந்திரோதயம் எவ்வளவு அழகாக இருக்கும்? மிக பெரியதாகவும் சிவப்பாகவும் தோன்றி சந்திரமண்டலம் உயரக் கிளம்பி வெள்ளை வெளேருன்று ஒலியுடன் பிரகாசிக்கிறது.  இது ஒரு வெண்சங்கோ? அல்லது பால் கட்டியோ? தாமரைத் தண்டின் நூலின் பந்தோ? அல்லது ஓர் ராஜஹம்சம் கடலில் நீந்தி வந்து பறக்கிறதோ? என்று கவிகள் உத்ப்ரேக்ஷிக்கும் படி சந்திரன் பிரகாசித்தான்.

சீதையை தேடிப்புறப்பட இதுவே தருணம் என்று நினைத்தார் ஹனுமான். சந்திரனைக் கண்ட ஹனுமான் உடனே இராமச்சந்திரனை தியானம் செய்துக் கொண்டு இலங்கையின் கோட்டை வாசலில் நுழையலானார். அப்போது அங்கு கோட்டை வாசலில் லங்கிணி என்ற அரக்கி நின்று கொண்டிருந்தாள். அவள் இலங்கைக்கு காவல் தேவதை போலும். “ டேய், நீ யார்? எங்கே போகிறாய்? நில்!” என்று மிரட்டினாள். ஹனுமான்” நான் ஒரு வானரன் “. இலங்கையைச் சுற்றி பார்க்க அயலூரிலிருந்து வந்துள்ளேன் என்றார். லங்கிணி” நீ உள்ளே போகக் கூடாது” என்று தடுத்து விட்டாள். ஹனுமான் இந்த லங்கிணியை மதிப்பாரா? மீறி புறப்பட்டார். அவள் ஹனுமானை அடித்து விட்டாள். ஹனுமானுக்கு கோபம் வந்து விட்டது. இதுவரை அவரை எந்த ஸ்த்ரீயும் தொட்டதில்லை. இப்படியிருக்க மஹாவீரனான தான் ஒரு அவலை கையில் அடிவாங்கினோமே என்று வெட்கினார். அவர் அவளை திருப்பி அடித்து விடுவார். ஆனால் அவள் அந்த அடி தாங்காமல் செத்துவிடுவாள். வீணாக பெண்ணைக் கொன்ற பாவம் நமக்கு எதற்கு என்று அவளை அலட்சியம் செய்து விட்டு கோட்டைக்குள் நுழையலானார். அவளோ மீண்டும் ஹனுமானை அறைய வந்தாள். ஹனுமான் இவளை அடக்காமல் உள்ளே போகமுடியாது என்று எண்ணி தன் இடது கையால் அவளை லேசாகத் தட்டினார். அதுவே அவளுக்கு தாங்க முடியாமல் கீழே விழுந்து விட்டாள். மேலும் அடி விழுமோ என்ற பயத்தினால் அவள் ஹனுமானை கை குவித்து வணங்கி மன்னிக்கும்படி பிராத்தித்து, ப்ரஹ்மதேவனின் சாபத்தை நினைவுக்கொண்டாள். எப்போது உன்னை ஒரு வானரன் அடக்குவானோ அப்போது லங்கையிலுள்ள சர்வ ராக்ஷஸர்களுக்கும் நாசம் ஏற்படும் என்பதே அந்த சாபமாகும். எனவே இன்று முதல் அரக்கர்களுக்கு நாசம் வந்து விட்டது. நீ சுதந்திரமாய் பிரவேசித்து இலங்ககைப் பார்த்துப் போ என்று விடை தந்து விட்டாள். ஹனுமானும்  மிக சந்தோஷத்துடன் தன் இடது கால் முதலில் வைத்து உள்ளே புகுந்தார்.

பெரிய மாளிகைகள் நிறைந்த வீதிகளும், கடைவீதிகளும், நாற்சந்திகளும், சபாமண்டபங்களும், கோவில்களும், நந்தவனங்களும், உத்யானவனங்களும்  நிரம்பி, அமராவதியை போலும் அலகாபுரியைப் போலும் உள்ள இலங்கையை கண்டார்.  எங்கும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்னும் சதுரங்க சைன்யங்களுடன் கட்டும் காவலுமாய் உள்ள இந்த லங்கையில் தேவர்கள்கூட நுழையவோ, முற்றுகையிடவோ முடியாது என்று எண்ணி கொஞ்சம் கவலைப்பட்டார். பிறகு இராம லக்ஷ்மணர்களின் பராக்கிரமத்தை நினைத்து சமாதானம் அடைந்தார்.

மிகவும் பயங்கரமான அரக்கர்கள் கையில் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் அலைவதையும், ப்ரஹ்மராக்ஷஸர்கள் வேத பாராயணம் செய்வதையும், ஆபிசார ஹோமங்கள் செய்வதையும் கண்டார்.  மஹோதரன், அகம்பணன், ப்ரஹஸ்தன், இந்திரஜித், கும்பகர்ணன், விபீஷணன் முதலிய பிரதான ராக்ஷஸ வீரர்களின் மாளிகைகளை கண்டார். கடைசியாக இராவணனின் அரண்மனைக்கு வந்தார். மிக பெரியதான அந்த அரண்மனையில் பல இடங்களிலும் சீதையை தேடித் கொண்டு அந்தப்புரத்துக்கு வந்தார். அங்கு ராக்ஷஸ ஸ்த்ரீகளும், தேவசுந்தரிகளும், வித்யாதர ஸ்த்ரீகளும், முனிகன்னிகைகளும், கந்தர்வ ஸ்த்ரீகளும், நாககன்னிகைகளுமான பல விதமான அழகிய வனிதைகள் நிறைந்த ஒரு ஸ்திரீ வனத்தையே கண்டார் எனலாம்.  இராவணனுக்கு வசமான இவர்கள் மதுபானம் செய்து, மயங்கி, இராவணனால் அனுபவிக்கப்பட்டு அவரவர் கையிலுள்ள வாத்தியங்களுடன் வஸ்திரபூஷணங்கள் கலைந்தது கூடத் தெரியாமல் அலங்கோலமாகப் படுத்து உறங்குவதைக் கண்டார்.  அவர்களின் நடுவில் உயர்ந்த கட்டிலில் மெத்தென்ற ஹம்சதூளிகா மஞ்சத்த்தில் மிக ஒய்யாரமாக படுத்து உறங்கும் பதிவிரதையான மந்தோதரியைக் கண்டார். அவளிடம் உள்ள பதிவ்ரதைக்குரிய சாமுத்திரிகா லக்ஷணங்களைக் கண்ட ஹனுமார் ஒரு கணம் சீதையோ என்று நினைத்தார். ஆடினார், பாடினார், குதித்தார், களித்தார் ,திகைத்தார். பிறகு விவேகத்தினால் ஆராய்ந்தார். ”சீச்சீ” இவள் சீதை இல்லை. சீதையாக இருந்தால் இராமரை விட்டுப் பிரிந்து அந்நியனுடைய அந்தப்புரத்தில் இப்படி நிம்மதியாகத் தூங்குவாளா? என்று நினைத்து தெளிந்தார். அங்கு புஷ்பக விமானத்தில் படுத்து உறங்கும் கம்பீரமான தோற்றமுடைய இராவணனையும் கண்டு இவன் தான் ராக்ஷஸராஜன் என்று அறிந்து கொண்டார்.

பிறகு அங்கிருந்து பானசாலைக்குள் சென்று ஏராளமாய்க் குவித்து கிடைக்கும் போஜன பதார்த்தங்களையும், திண்பண்டங்களையும், பானங்களையும் கண்டார். புலனை அடக்கிய ஹனுமானுக்கு அவைகளைக் கண்டும் நாக்கில் ஜலம் ஊறவில்லை,பசியும் எடுக்கவில்லை. இரவு சாப்பிடாமலேயே அலைந்தும் கூட களைப்போ, சலிப்போ ஏற்படவில்லை. சீதையை தேடுவதே குறியாக இருந்தார். அந்யனுடைய அந்தப்புரத்தில் புகுந்து இவ்வளவு பெண்மணிகளை பார்ததது தன் நேர்மைக்கும், ப்ரஹ்மசர்யத்துக்கும் உசிதமாகுமா? என்று தன உள்ளதையே கேட்டுக் கொண்டார். உலகில் பெண்களை பாராமல் இருக்க முடியாது. பார்த்தாலும் குற்றமில்லை. ஆனால்  காமபுத்தியுடன் பார்க்கக் கூடாது. மாதாவைப் போலவோ, சஹோதரியைப் போலவோ பாவித்துப் பார்க்கலாம். நான் இவ்வளவு ரூபங்களையும் ஜெகன் மாதாவான சீதையோ இவள் என்றுதானே பார்த்தேன். எனவே என் புத்தி எனக்கு வசமாகவே இருக்கிறது. எனக்கு என் மனஸாக்ஷியே பிரமாணம். இதுவே போதும். மேலும் ஒரு பெண்ணைத் தேடிவந்த நான் பெண்களின் கூட்டத்தில் தானே பார்க்க வேண்டும். எனவே நேர்மைக்கும் இது விரோதமில்லை என்று நினைத்து, தன்னை சமாதானம் செய்துக் கொண்டார். இவ்வாறு நள்ளிரவு வரை இலங்கை பூராவும் சீதையைத் தேடித்தேடி அலைந்து, காணாமல் மனம் சலித்து ஒரு தனித்த மரத்தில் அமர்ந்து ஹனுமார் சிந்திக்கலானார். இனி இலங்கையில் ஒரு நாலு அங்குலம் இடம் கூட இல்லையாம். அப்படித் தேடிவிட்டாராம். இவ்வளவு விதமான பெண்கள் யாவரும் கண்களில் தென்பட்டனரேயன்றி சீதையைக் காண முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்துக் கண்ணீர் விட்டார்.

 சீதா தர்சனம்

சீதையைத் தேடியும் காணாதபடி ஹனுமான் வருந்தி தனக்குள் தானே சிந்திக்கலானார். சீதையைக் காணாமல் நான் திரும்புவேனாகில் இவ்வளவு முயற்சியும் வீணே! நான் கடலைத் தாண்டியது கூட பெரிய காரியமில்லை. சீதையைக் காணாமல் திரும்பிச் சென்று வானரர்களுக்கு  என்ன பதில் சொல்லுவேன்? சீதையை காணவில்லை என்று சொல்லிக் கொண்டு சுக்ரீவனிடம் சென்றால் வானரர்களைக் கொன்று போடுவார். சம்பாதி இங்கு சீதை இருப்பதாகச் சொன்னாரே அதுவும் பொய்யோ? சீதையைக் காணாமல் இராமரும் லக்ஷ்மணரும் உயிரை விட்டு விடுவார்கள்.  நண்பர்களான  அந்த இருவருக்கும் பிரதி உபகாரம் செய்ய முடியாமல் சுக்ரீவனும் உயிர் துறப்பான். தலைவனை இழந்த வானரர்களும் மாண்டு போவார்கள். தன் தமையன் வனவாசம் முடிந்து வராததால் பரதனும் ஷத்ருகுணனும் தீக்குளித்து விடுவார்கள். நாட்டு மக்களும் உயிர் துறப்பது திண்ணம். இவ்வளவு பேர்கள் உயிர் துறப்பதை விட நான் இங்கேயே பிராணத்த்யாகம் செய்து விடுவது நலம்.  நான் சீதையைக் கண்டு போவேனானால் இவ்வளவு  பேர் உயிரையும் காப்பாற்றியவனாவேன். காணாமல் போவேனானால் இவ்வளவு பேர் உயிருக்கும் ஹானியை  ஏற்படுத்தியவனாவேன். என்ன செய்வது? என நினைத்துத் திகைத்தார்.

பிறகு இத்தகைய அதைர்யத்திற்கு இடம் தரலாகாது .சோகம் யாவரையும் சோம்பேறியாக்கி விடும். உற்சாகமே முக்கியமாகும். எனவே உற்சாகத்தைக் கைவிடலாகாது. தெய்வானு-கூல்யத்துடன் மறுமுறை சீதையைத் தேட முயற்சிப்போம் என்று நினைத்தார். கடலைத் தாண்டக்  கிளம்பிய ஹனுமான் ஆரம்பத்தில் சூர்யன், சந்திரன், இந்திரன், வாயு முதலிய தேவதைகளை வணங்கினாரே யன்றி சீதையை வணங்கவில்லை. மறந்து விட்டார் போலும். அவர் தேடி வந்தது ஒரு தெய்வத்தையல்லவா? அந்த தெய்வத்தின் திருவருளால் அவள் தர்சினம் வேண்டி ஹனுமான் சீதை என்ற அந்த தெய்வத்தை பரிவாரத்துடன் சேவித்து துதித்தார்.

“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யைச் தஸ்யை ஜநகாத்மஜாயை!

நமோஸ்து ருத்ரேந்திரயமாநிலேப்யயோ, நமோஸ்து சந்த்ரார்க்க மருத்துகணேப்ய:”

 லக்ஷ்மணனுடன் கூடிய ராமனுக்கும், ஜனக குமாரியான அந்த சீதாதேவிக்கும், ருத்திரன், இந்திரன், யமன், வாயு முதலிய திக்தேவதைகளுக்கும் நமஸ்காரம் என்றார்.  இங்கு “தஸ்யை தேவ்யை” என்பதால் சீதாதேவிக்கு முக்யத்துவமாகும்.” “எவளை  தேடி வந்தேனோ- அவளை” என்று சம்பந்தம். “தேவ்யை என்பதால்” அவள் ஒரு சாதாரணப் பொருள் அல்லவே, தன் முயற்சியால் தான் அடையவேண்டும் என்பதற்கு! தேவியாதலால் அவளது கருணையால் கிடைத்து விடுவாள் என்று பொருள். ஜனக குமாரியாக இருப்பதால் அவதார விசேஷம் சொல்லப்பட்டது. ஸாக்ஷத் லக்ஷ்மியை விட அவதாரத்தில் கருணை அதிகம். ஏனெனில் மனிதர் படும் பாடு அவதாரத்தில் தானே தேவிக்கும் அனுபவ ப்ராப்தமாகிறது. ஒரு தேவதைக்கு இரண்டு துவாரபாலகர்களை போல் லக்ஷ்மணனும் ராமனும் நிறுத்தப் படுகின்றனர்.” யா ரக்ஷிதா ராகவ லக்ஷ்மனாப்யாம்” என்று வால்மீகி சொல்லுகிறார். ஆவரண தேவதைகளாக ருத்திரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூர்யன் மருத்துக்கள் முதலியவர் சொல்லப்படுகின்றனர். சீதையே பிரதான மூர்த்தி. இராம லக்ஷ்மணர்கள் துவாரபாலகர்கள். மற்ற எல்லா தேவதைகளும் ஆவரண தேவதைகள். ஸீதையிடமே ஏகாந்த பக்தியுள்ள ஹனுமான் மற்ற தேவதைகளை ஆவரண தேவதையாக மதித்து வணங்குவது தோஷமில்லை. பரதேவதையாக சீதையை மதித்துள்ளார். இராம பத்தினியாக இருப்பதாலேயே சீதை பரதேவதை. புருஷர்களுக்குள்ள ஐஸ்வர்யம் பத்தினிக்கும்  உண்டல்லவா?

இவ்வாறு சீதையை வணங்கி விட்டு உற்சாகத்துடன் எழுந்த ஹனுமானுக்கு  அசோகாவனம் கண்ணிற்பட்டது.  உடனே அந்த இடம் இதுவரை தேடவில்லையே! ஆஹா! போய்ப் பார்க்கலாம்! நிச்சயம் சீதை இங்குதான் இருப்பாள் என்று ஹனுமான் சந்தோஷத்துடன் அசோகவனத்தை நோக்கி நடந்தார்.

அசோகவனம் இராவணனுடைய ஓர் க்ரீடாவனம் ஆகும். அதில் பலவிதமான புஷ்பச்செடிகளும், பழ வ்ருக்ஷங்களும், மண்டபங்களும், தடாகங்களும், கோவிலும் ஏற்படுத்தி இருந்தான். அதற்குள் ஹனுமான் பிரவேசித்ததும் யாரோ சிலர் உட்கார்ந்துயிருப்பதைக் கண்டார். ஆர்வத்துடன் மரத்தின் மேலேயே தாவிச்  சென்றார். கடைசியாக ஒரு சிம்சுபா வ்ருக்ஷத்தில் வந்து அமர்ந்தார். ஸமீபத்திலுள்ள மண்டபத்தில் தான் சீதை உட்கார்ந்திருந்தாள். மிகவும் மெலிந்த திருமேனி உடையவளும், ஆகாரம் நித்திரை இல்லாதவளும், புரண்டு அழுவதால் புழுதி அலைந்த திருமேனி உடையவளும், கந்தையை உடுத்தி இருப்பவளும், ஜடை போல் பின்னல் போட்ட கூந்தல் உடையவளும், எப்போதும் “ராமா” “ராமா” என்று அழுபவளும், பெருமூச்சு விடுபவளும், விரக வியாதியால் கஷ்டப்படுபவளும், கவலைப்படுபவளும், சுகபோகங்கள் அற்றவளும், சுகமாக இருக்கத் தகுதி உடையவளும், லோகநாதனுடைய தர்மபத்தினியாயினும் அனாதைப்போல் இருப்பவளுமாகிய சீதையை ஹனுமான் கண்டு விட்டார். இவள் தான் சீதையா என்று தனக்குள் ஆலோசித்தார். இவள் உடுத்திய கந்தையின் மற்றொரு பகுதியும், பூட்டிக் கொண்டுள்ள பூஷணங்களின் மற்றொரு ஜோடியும் கிஷ்கிந்தையில் இவளாலேயே தூக்கி எறியப்பட்டது தங்கள் வசமிருப்பதியும் கொண்டு, இராமபிரான் சொன்ன பிராட்டியின் அடயாளங்களைக் கொண்டும் இவள்தான் சீதாதேவி என்று அறிந்துக்கொண்டார்.

ஹனுமானுக்கு  ஏற்பட்ட சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. இவள் பூமியிலிருந்து தோன்றியவள் அல்லவோ? இந்த சீதை ஜனகராஜா குமாரியன்றோ? இவள் நிமித்தமாக அல்லவா இராமர் சிவதனுசை முறித்தார். இவள் தசரத சக்ரவர்த்தியின் நாட்டுப் பெண்ணும் ஸ்ரீராம பிரபுவின் தர்ம பத்தினியுமாவாள். அரண்மனையில் சுகமாக வாழவேண்டியவள் சகல சுகத்தை தியாகம் செய்து வனவாசத்திலும் பர்த்தாவுடன்  கூட கிளம்பிய பதிவிரதை அல்லவா? இவளை இராவணன் கொண்டுவந்து இங்கு வைத்துள்ளானே? அந்தோ! இவள் நிமித்தமாக ஜடாயுவும் உயிரைத் துறந்தாரே! இராமர் இவளைத் தேடி வந்ததால் அல்லவா எனக்கு இராம தர்சினம் கிடைத்தது! வாலியும் கொல்லப்பட்டான். சுக்ரீவனும் ராஜ்யத்தை அடைந்தான்.  இவளைத் தேடியல்லவா வானர வீரர்கள் உலகில் அலைகின்றனர். கடலையே தாண்டி வந்து இவளை இங்கு கண்டு விட்டேனே! நானே பாக்கியவான். இவள் கற்பின் எல்லை நிலையம். இத்தகைய உத்தமியை விட்டு இராமர் எப்படி உயிர் தரிக்கிறார்? இனி ஒரு போதும் ஸீதையும் இராமனையும் பிரிந்து பார்க்க தாளமாட்டேன்.  இப்போதே என்  இதய ஊஞ்சலில் மானசீகமாய் இருவரையும் சேர்த்து அமர்த்தி சேவை செய்யட்டுமா? இப்போதே சென்று இராமரிடம் சீதையைக் கண்ட செய்தியைத் தெரிவித்தால் இராமன் என் விஷயத்தில் எவ்வளவு சந்தோஷமடைவார்! ஆஹா! நானே பாக்கியவான்! என்று பலவாறு நினைத்து உகப்படைந்தார்.

சீதா இராவண ஸம்வாதம்

சந்தர்ப்பம் பார்த்து சீதையைக் காணவும், பேசவும் துடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் ஹனுமான். சீதையை சூழ்ந்து எப்போதும் விகார ரூபங்களுடைய ராக்ஷஸிகள் உட்கார்ந்து கொண்டே இருந்தனர். இராவணனுக்கு அடிமையாகும்படி மிரட்டிக் கொண்டிருந்தனர். சீதை அவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஸ்ரீராம சரணத்திலேயே லக்ஷ்யம் உடையவளாக இருந்தாள்.

ஸீதையின் திடமான ராமபக்தியைக் கண்டு ஹனுமான் மிகவும் சந்தோஷப்பட்டார். யாருமறியாமல் தேவியை சந்தித்துப் பேசக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது இராவணன் புறப்பட்டு வந்தான். பல பெண்மணிகள் தீபங்கள் ஏந்தி கூட வந்தனர். பல வாத்தியங்களுடன் பாடிக் கொண்டு வந்தனர். இராவணன் புஷ்ப, சந்தன, தாம்பூலாதிகளால் அலங்கரித்துக் கொண்டு சீதையைக் காணவேண்டி வந்தான். காமபரவசனாய் வரும் அவனைக் கண்டு சீதை பேய்க்காற்றில் அகப்பட்ட வாழைமரம் போல் நடுங்கினாள். தலை குனிந்து பாராமுகமாய் உட்கார்ந்திருந்தாள்.

இராவணன் வெட்கமின்றி  கண்டபடி பேசத்  தொடங்கினான். தேவியின் ப்ரபாவத்தால் அவள் கிட்டே வர நடுங்கினான். தேவியிடம் வந்ததும் கெஞ்சினான். தன் செயலைக் கண்டு தானே வெட்கினான். தேவியின் முன்னிலையில் சோபை இழந்து போனான். அசடு வழிய பேசத்  தொடங்கினான்.

சீதே! இதுவரை இராமனுக்கு மரியாதை தந்தது போதும். இனிமேல் என்னை கௌரவிப்பாயாக. இராமன் இனிமேல் என் கையிலிருந்து உன்னைப் பெறவே முடியாது. எனவே இராமனை மறந்துவிடு. அழகிலோ, பராக்ரமத்திலோ, ஐஸ்வர்யத்திலோ, பலத்திலோ எனக்கு எவ்விதத்திலும் ராமன் சமமாக மாட்டான். எனவே வலுவிலேயே வந்த என்னை விட்டு விடாதே. உன்னை நான் பட்டமஹிஷியாக வைத்துக் கொள்வேன். என் சொத்து பூராவும் உனக்கும் உன் தந்தைக்கும் எழுதித்தருவேன்.  எனக்கு பல ராணிகள் இருந்தபோதிலும் உன்னைப் பார்த்த பிறகு யாரைப் பார்த்தாலும் கசக்கிறது. உனக்கு ஈடான அழகி மூவுலகிலும் இல்லை. உந்தன் எந்த அவயத்தை பார்த்தாலும் கண்ணை எடுக்க முடியவில்லை. ஆனாலும் எனக்கு உன் சரணகமலத்த்தில் தான் ஆசை அதிகமாகிறது. எனவே சரணத்திலாவது என்னைத் தொடு. அப்போது தான் என் மனதிற்கு சமாதானம் ஏற்படும். நான் அதர்மம் செய்யத் துணிந்தவன் என்று எண்ணாதே. பிறருடைய சொத்தைப் பிடுங்குவதோ,பிறருடைய பெண்ணைக் கொண்டு வருவதோ ராக்ஷஸர்களுக்கு ஸ்வதர்மம் ஆகும். எனவே இது குற்றமில்லை. தானே தேடி வந்த என்னை விட்டுவிட்டு பிறகு வருந்தாதே. என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள் என்று கெஞ்சினான்.

அவன் வார்த்தையைக் கேட்டு தேவி அலட்சியமாகப் புல்லை பிடுங்கி எதிரில் போட்டு அதைப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கினாள்.

            த்ருண மந்தரத: க்ருதவா ப்ரத்யுவாச சுசிஸ்மிதா!

            நிவர்த்தய மநோ மத்த: ஸ்வஜநே க்ரியதாம் மந:!!

 புல்லை பிடுங்கிப் போட்டு பேசியதற்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் பல காரணங்களை உத்ப்ரேஷிக்கிறார்.

  • பரபுருஷனான இவனுடன் பேச ஒரு திரை வேண்டுமே என்று புல்லை போட்டாள்.
  • ஒரு ஆண்பிள்ளை பெண்பிள்ளை எதிரில் நின்று பேசலாகாது- உட்காரட்டும் என்று ஆசனம் போட்டாள்.
  • அரசனாக இருப்பதால் ஆசனமிட்டு மரியாதை செய்து பேசத் தொடங்கினாள் போலும்
  • “பலம், வீர்யம், அழகு, ஐஸ்வர்யம் முதலியவைகளில் ராமன் எனக்கு ஈடாக மாட்டான்” என்றாயே,- ராமன் எதிரில் உன் பலம் முதலியவை புல்லுக்கு சமமாகும். நீயும் இராமனுக்கு எதிரில் புல்லுக்கு சமம் என்றாள்.
  • எனக்கு உன் ஐஸ்வர்யம்(சொத்து) எல்லாம் எழுதித் தருவேன் என்கிறாயே,- அதை நான் புல்லாகக் கருதுகிறேன் என்றாள் போலும்.
  • என் தந்தையும் உன் சொத்தைப் புல்லாய் மதிப்பார் என்கிறாள்
  • என் அவயங்களை உன் கண்களால் பார்க்கிறாய்- அந்த கண்களை இந்தப் புல்லால் தோண்டி எடுத்து விடுவேன் என்கிறாள் போலும்.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றபடி காகாசுரனின் கண்ணைத் தோண்டிய பெருமாள் இந்தப் புல்லால் உன் கண்ணையும் தோண்டுவார் என்கிறாள்
  • பரத் தாரம் என்ற விவேகம் இல்லாத நீ புல்லைத் தின்னும் மாட்டுக்கு சமம் என்கிறாள்.
  • இந்தப் புல்லைத் தாண்டி நீ என்னிடம் வந்துவிட முடியாது என்கிறாள்.
  • அன்று ஸ்தம்பத்திலிருந்து ப்ரஹ்லாதனை ரக்ஷித்தவன் இன்று இந்தப் புல்லிலிருந்து வந்து என்னை ரக்ஷிப்பவன் என்கிறாள்.
  • கிட்டே வந்தால் புல்லை போல் பொசுங்கி விடுவாய் என்கிறாள்.
  • புல்லிலாவது பசுமை இருக்கிறது. உன் உள்ளத்தில் ஈரமில்லையே என்கிறாள்.
  • புல்லின் நுனியின் கூர்மையைப் பார். உன் புத்தி ஏன் மழுங்கி விட்டது என்கிறாள்.
  • உனக்கு பதில் இந்த புல்லே சொல்லும் என்கிறாள்

“சுசுஸ்மிதா” என்னும் வார்த்தைக்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பல அர்த்தங்களை கூறுகிறார்:

  • குழந்தை அசட்டு வார்த்தைகளை பேசும் போது தாயார் எப்படி சிரிப்பாளோ, அதுபோல் இராவணனுடைய அசட்டு வார்த்தைகளை கேட்டு சிரித்தாள் சீதை என்கிறார் “சுசிஸ்மிதா” என்பதால்.
  • தாம்பூல வர்ணமில்லாததால் வெள்ளைச் சிரிப்பு என்கிறார்
  • அல்லது ஸ்வபாவமாகவே முத்துப் போல ஜ்வலிக்கும் பல்வரிசையின் காந்தியால் “சுசுஸ்மிதா” என்கிறார்
  • இதயத்தில் கபடமில்லாது குழந்தை போன்று சுத்தமான சிரிப்பு என்று” சுசுஸ்மிதா” என்கிறார்
  • இராவணனின் பேச்சைக் கேட்டும் மயங்காமல் அலட்சியமாகச் சிரித்தாள் “சுசுஸ்மிதா” என்று
  • சிரிப்பதாலேயே இராவணன் உள்ளத்தில் உள்ள அழுக்கை நீக்க வல்லவள் என்கிறார்

“ப்ரத்யுவார” என்பதால் அவன் சொன்னதிற்கெல்லாம் பதில் சொல்லியாயிற்று. ஒருகால் அவனுக்குப் புத்தி சொன்னால், விவேகம் வந்து திருந்தமாட்டானோ என்று எதிர்பார்த்துக் கருணையால் பேசினாள் என்று பொருள்.

“என்னைவிட இராமன் பலத்திலோ பராக்ரமித்திலோ சிறந்தவன் இல்லை” என்றாயே இராமனும் லக்ஷ்மணனும் இல்லாத சமயத்தில் அபலையான என்னை கொண்டு வருவானேன்? இராமனிடம் உள்ள பயத்தினால்தானே? எனக்கு “செல்வமெல்லாம் தருகிறேன்” என்கிறாயே, உன் செல்வத்தை  நானோ என் தந்தையோ மதிப்போமா? ராக்ஷஸர்களுக்கு இது ஸ்வதர்மம் என்கிறாயே உனக்கு ராக்ஷஸ தர்மம் கூட சரியாகத் தெரியவில்லையே? அஷ்டவித விவாகங்களில் ராக்ஷஸ விவாகம் என்பது கன்னிகையை அபகரிப்பதேயன்றி விவாஹமான பெண்ணைக் கொண்டு வருவதில்லையே? உனக்கு சத்சங்கமில்லாததால் நன்னடத்தை இல்லை. சாதுக்கள் இங்கு இல்லாமல் இல்லை. விபீஷணன் போன்ற சாதுக்கள் இருந்தும் நீ மதிக்கவில்லை. சாதுக்கள் இருப்பதாலேயே இலங்கை க்ஷேமமாக இருக்கிறது. நீ ஆளுவதால் இல்லை. நீயாக ஒரு சாதுவை தர்மம் கேட்க மாட்டாயாகிலும் நானே உனக்கு வந்த இடத்தில உபதேசம் செய்கிறேன். கவனித்துக் கேள் என்றாள் ஸீதை.

“அந்த இராமன் சரணாகதவத்சலன் என்பது தெரிந்த விஷயமே அல்லவா? எனவே நீ ஜீவிக்க வேண்டுமென்று விரும்புவாயாகில், உனக்கு அந்த இராமனுடன் ஸ்நேஹம் உண்டாகட்டும்” என்றாள் சீதை. “இராமனையும் தன்னையும் பிரித்த பாவி நீ நாசமாகப்போ” என்று சொல்லாமல் “பிழைக்க வழி சொல்கிறேன்” என்றாள். தன்னிடம் அபராதம் செய்த போதிலும் தாய் தன மகன் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்றே கருதுவாள். இதுவே ஜகன்மாதாவான சீதையின் கருணைக்கு அழகு. இராமனை சரண் ஆடை என்று சொன்னாள்.

ராக்ஷஸ சக்ரவர்த்தி தான் என்று அபிமானிதிருக்கும் இவன் அப்படி வணங்க மாட்டானோ என்று நினைத்து அரசனுக்கு அரசன் நட்பு கொள்வது போல் ஸ்நேகம் கொள் என்கிறாள். “மைத்ரி பவது “  என்பதால். சரணாகதி என்று வந்த விபீஷணனையே “மித்ரபாவென ஸம்ப்ராப்தம்” என்று ஏற்றுக் கொள்ளப் போகும் பெருமாளுக்கு, மித்ரன் என்றாலே போதுமே! சரணாகதனாகி விட்டால் கேட்கவும் வேண்டுமா?  இத்தகைய அபராதம் செய்து விட்டு, இனி ஸ்நேகம் என்று போனால் அவர் ஏற்பாரோ என்று எண்ணாதே. அவர் தர்மம் தெரிந்தவர் என்றாள். தம்மிடம் வந்தவனை ஏற்பதே சிறந்த தர்மம்; சாம, தாம, பேத, தண்டங்களில்- சாமமே சிறந்த முதல் நீதி என்று தெரிந்தவர். சரணாகதர்களைக் கைவிடக் கூடாது என்ற தர்மம் தெரிந்தவர். சரணாகதனிடம் வாத்சல்ய முடையவர். இது பிரஸித்த மாயிற்றே! யாவருக்கும் தெரியுமே என்கிறாள் “விதித” என்ற பதத்தால்.

பெருமாளுக்கு அபிமதமான என் அவய  விசேஷத்தைக் கீறி புண்ணாக்கிய காகாசுரனுக்கே அபாயம் கிடைத்ததே! அனுக்குலையாமல் எடுத்து வந்து இங்கு வைத்துப் பாதுகாத்துவரும் உனக்கு அபாயம் கிடைக்கக் கேட்பானேன் என்று பாவார்த்தம்”

“ ஸ ஹி” என்பதால் அவரே தர்மஞர். அவரே சரணாகத வத்சலன். அவரே நட்புக்குரியவர். அவரே ஜீவிக்கச் செய்ய சமர்த்தர் என்று பொருள். ஜீவிக்கச் செய்வதோடன்றி, உஜ்ஜீவிக்கச் செய்வதும், பகவத் சரணாகதி என்ற தர்மம் என்றும் தாத்பர்யம். பரம அபராதியான இவனுக்கு அபயம்  வாங்கித் தந்தால் தன் அவதாரம் க்ருதார்த்தமாகி விட்டது என்று நினைக்கிறாள் போலும்! ஆனால் அதை வேண்டாதவனான இராவணன் சீதையின் வார்த்தையை அலட்சியம் செய்து விடவே சீதை தைர்யமுடன் பேசினாள்.  உனக்கு நான் ஹிதத்தைப் பேசியும் புத்தியில் ஏறவில்லையே! “விநாசகாலே விபரீத புத்தி” என்றபடி உனக்கு விநாசகாலம் ஏற்பட்டிருப்பதால் தான் என்னைக் கொண்டு இங்கு வைத்திருக்கிறாய். உன்னைக் கண்டு நான் பயப்படவில்லை. என் கற்பு என்னும் தீயால் உன்னைப் பொசுக்கி விடுவேன். ஆயினும் இராமனின் சந்தேசத்தை எதிர்பார்த்திருக்கிறேன் . கற்பு என்னும் தபஸையும் பரிபாலித்து வருகிறேன். கணவனின் உத்தரவின்றி எதையும் செய்யக் கூடாது என்பது பிராட்டியின் திருவுள்ளம் ஆகும். தானும் இவனைத் திருத்தி பணிக் கொள்ள வேண்டும் என்று கருதி இருப்பதாலும், சரணாகத வத்ஸலனான இராமன் இவனுக்கு அபயம்தர நிச்சியத்திருப்பதாலும், கொளுத்தவில்லை என்ற பொருள். சர்வரக்ஷகனும், சர்வ சமர்த்தனுமான இராமன் என்னை ரக்ஷிக்க தீக்ஷிதனாய் இருக்க, நான் என்னை ஏன் ரக்ஷித்துக் கொள்ள வேண்டும்? அது எனக்கு அழகு இல்லையே! என்று பூர்ண சரணாகதியை தேவியின் ஸ்வரூபம். இதைக் கேட்ட இராவணன் மிக வெகுண்டு வாளை உருவி சீதையை வெட்டிப் போட கிளம்பவே, தான்ய மாலினி என்ற ராவணபத்தினி அவனை சமாதானம் செய்து திரும்பினாள். உடனே இராவணன் அரக்கிகளைப் பார்த்து “இந்த சீதையை இரண்டு மாதங்களுக்குள் எனக்கு இணங்கியவளாகச் செய்ய வேண்டும். அப்படி இணங்காவிடில் இவளைக் கொலை செய்து என் காலைவேளை ஆகாரத்துக்கு தயார் செய்து விடுங்கள்” என்று மிரட்டிவிட்டுப் போய்விட்டான் .

த்ரிஜடையின் கனவு

சீதை இராவணன் போனபிறகு இராமபிரானை நினைத்து மனமுருகிப் புலம்பினாள். அரக்கிகளோ அவளை பலவாறு திட்டலானார்கள். சீதே! உனக்கு இவ்வளவு கர்வம் தகாது. எல்லா தேவர்களாலும் சேவிக்கப்படும் ராக்ஷஸ ராஜனான இராவணனே உன்னை சேவிக்கும் போது,  நீ அவனை மதியாமல் இருப்பது உசிதமாகுமா? உன் கர்வத்தை அடக்குவோம். நீ இராவணனேயே பர்த்தாவாக பஜிப்பாயாக. மீறினாயானால் உன்னைக் கொலை செய்து விடுவோம். மனிதர்களுடைய  இதயத்தில் உள்ள கிழங்கு நல்ல ருசியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இராவணனுக்காக உன்னிடம் தாக்ஷிண்யம் பார்க்கிறோம். இல்லையேல்  இவ்வளவு நாள் உன் இதயத்தைப் பிளந்து தின்றிருப்போம். நீ என்ன செய்ய முடியும்? வீணாக எங்களுக்கு பலியாகி சாகாதே. ராவணனை சுகப்படுத்தி நீயும் சுகமாக இரு. இதுவே நாங்கள் உனக்கு சொல்லும் நல்ல புத்தி என்றனர்.

இதைக் கேட்ட தேவி குமுறி அழுதாள். பிறகு தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தைர்யமாய்ப் பேசினாள். அரக்கிகளே! இரக்கமற்ற உங்களுக்கு மனித மாமிசத்தை சாப்பிடுவது என்பது பெரிய காரியமில்லை. அது உங்களுக்கு ஸ்வபாவம். உங்கள் விருப்பப்படி என்னைக் கொலை செய்து சாப்பிட்டு விடுங்கள். ஆனால் ராவணனை எப்படி அடைய முடியும்? நான் மற்றொருவருக்கு வாழ்க்கைப் பட்டவள். கற்பு உயிரை விட பெரியது. உயிரை விட்டாலும் கற்பை விட மாட்டேன். வசிஷ்டரை அருந்ததி போலும், அகஸ்தியரை லோபாமுத்ரா போலும், அத்ரியை அனசூயை போலும், இந்திரனை சசிதேவி போலும், சந்திரனை ரோஹிணி போலும், நளனை தமயந்தி போலும், சௌதாஸனை மதயந்தி போலும், கபிலரை ஸ்ரீமதி போலும், நான் என் பர்த்தாவான ஸ்ரீராமனையே ஆச்ரயத்துள்ளேன். என் மனதை மாற்ற உங்களால் முடியாது என்றாள். இதைக் கேட்ட அரக்கிகள் சீதையை ” இதோ பார்! இப்போதே உன்னைக் கொலை செய்து போடுவோம்” என்று சொல்லி மிரட்டினார்கள்.

அதே சமயம் அங்கு தூங்கி கொண்டிருந்த த்ரிஜடை என்ற ராக்ஷஸி பரபரப்புடன் எழுந்து கொண்டு அரக்கிகளை அடக்கிப் பேசினாள். அரக்கிகளே! வீணாய் இவளை மிரட்டாதீர்கள். சீதையின் பெருமையெல்லாம் நான் அறிந்தேன். இவள் இலங்கையின் நாசத்திற்காக ஏற்பட்டுள்ளாள். இவளை அதட்டினால் நமக்கு பெரிய விபத்து இருக்கிறது, ஜாக்கிரதை! நான் ஒரு கனவு கண்டுள்ளேன். கவனித்துக் கேளுங்கடி! இராமன் ஒரு வெள்ளை யானை மேல் வந்து இவளை அதில் ஏற்றி ஆகாசமார்கமாய்ச் செல்லுகிறான். இராவணன் கழுதையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வந்து சானிக் குழியில் தள்ளப்படுகிறான். விபீஷணக்குப் பட்டாபிஷேகம் நடை பெறுகிறது. இராமரே நாராயணாகவும்,சீதையே லட்சுமிதேவியாகவும், பாற்கடலில் சேஷசயனத்தில் பள்ளிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கனவில் கண்டேன். இதனால் லட்சுமி- நாராயணனே சீதா-ராமனாய் ராவணவதத்திற்காகத் தோன்றி உள்ளனர் என்றும் ராவணன் சீக்கிரம் அழிந்து போவான் என்றும் விபீஷணன் முடிசூட்டப் படுவான் என்றும் தெரிய வருகிறது. எனவே இவளைத் திட்டியது பெரிய அபசாரமாகும். இவளை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இவள் நம்மை ரக்ஷிக்க வல்லவள்” என்றாள்.

இராமனோ சரணாகதியால் தான் பிரசன்னமாவான். சரணாகதிக்கு திடவிஸ்வாசம் லக்ஷணம். சீதையோ காலில் விழுந்தாலே ப்ரஸன்னமாவாள். ஞானியான ஜனகரின் பெண்ணாயிற்றே. அண்டியவர்களை ரக்ஷிக்கும் ஆபிஜாத்யமும் இவளுக்கு பொருந்துமே. நம்மை ரக்ஷிக்க இவள் ஒருவளே போதும். ராமன் கூட தேவையில்லை என்ற பொருள். இவள் இல்லாமல் ராமன் ரக்ஷிக்க மாட்டான். ஏனெனில் இராமன் கண்டிப்புள்ளவன். இவள் கடாக்ஷம் பட்டவர்களுக்கே இவளுடைய சிபாரிசினால் அபயம் தருவான்.

இவளோ இராமனின் அபேக்ஷையின்றியே நம்மை ரக்ஷிக்க போதுமானவள். ரக்ஷகனான தன் பதியைத் தனக்கு வசமாகவே எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவள். இவள் திருவுள்ளம் கலங்குமாகில் அந்த பயத்தினால் இராமன் யாரையும்- பரம அபராதியையும் கூட தண்டிக்க மாட்டான். எனவே இவளே நமக்குத் தஞ்சம். இவளை நிந்தித்த அபசாரம்  நமக்கு மகாபயமாகும். இதனால் வெகுண்டு வரும் கோதண்டபாணி நமக்கு மஹா பயமாகும். இவளை நிந்திப்பதைத் தாளாத ஹனுமான் நமக்கொரு மஹா பயமாகும்.

பிராட்டி, பெருமாள், பாகவதன் இம் மூவருக்கும் செய்த அபசாரத்தால் வரும் நரகவாசம் நமக்கு மஹாபயமாகும். அனாதிகாலமாய் நாம் செய்திருக்கும் பகவத் பாகவதபச்சார ரூபமான பாபங்களுக்கு பலனாய் வளர்ந்துவரும் இந்த சம்சார சாகரம் நமக்கு மஹாபயமாகும். இதிலிருந்து ரக்ஷித்துப் பரமபதத்தில் சேர்க்க வல்லது இவள் திருவடியே. எனவே இவள் திருவடிகளே தஞ்சமென்று காலில் வீழ்வோம் என்று கருத்து. இவ்வாறு த்ரிஜடை வாக்யத்தைக் கேட்டு ராக்ஷஸிகள் ஆச்சரிய பட்டனர். இதை உண்மை என்றே நினைத்தனர் போலும். சீதையை திட்டுவதை விட்டு விட்டனர். ஆனால் சீதையை சேவித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. இது ராக்ஷஸ ஸ்வபாவமல்லவா! சீதையோ, அவர்களை பார்த்து நீங்கள் இதுவரை திட்டியதற்குப் பயப்பட வேண்டாம். இராமன் வருவாராகில் உங்களை ரக்ஷிக்கும்படி நான் அவரிடம் வேண்டுவேன். அவர் தயாளு. உங்களை அவசியம் ரக்ஷிப்பார் என்றாள். நிம்மதியடைந்த ராக்ஷஸிகள் யாவரும் தூங்கி விட்டனர்.

அங்குலீயக பிரதானம்

அரக்கிகள் தூங்கி கொண்டிருந்தனர். ஆனால் சீதைக்கு தூக்கமேது? விரஹதாபத்தினால் தவித்துக் கொண்டிருந்தாள். த்ரிஜடைக்கு ஏற்பட்டுள்ள கனவு நமக்கு ஏன் ஏற்படலாகாது? கனவில்லாவது  இராமனைப் பார்ப்பேனோ? அதற்கு தகுதி இல்லையா என்று நினைத்தாள். எனவே ஹனுமான் இருக்கும் அந்த சிம்சுபா வ்ருக்ஷத்தினடியில் தெய்வாதீனமாய் வந்து அமர்ந்தாள். தேவி கதறி அழ ஆரம்பித்தாள்.

“என் பிரபுவே! என் ப்ரியனே! என்னை மறந்துவிட்டீரா? உமது திருவுள்ளத்தில் எனது நினைவே இல்லையா? என்னிடம் எவ்வளவு ப்ரியம் காட்டினீர்! அதெல்லாம் பொய்யோ? என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்? என் காதலனே! நீர் என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். என்னை அலட்சியம் செய்து விட்டீரோ? அப்படி செய்யமாட்டீர். நாதா! கானகத்தில் என்னைத் தேடித் தேடி களைத்து விட்டீரோ? அல்லது என் பிரிவால் உயிரைவிட்டு விட்டீரோ? அல்லது பதினான்கு வருஷம் வனவாசம் பூர்த்தியாகி அயோத்தி சென்று முடி சூட்டிக் கொண்டு சுகமாய் வாழ்கிறீரோ? என்னை நீங்கள் மறக்க மாட்டீரே! இது என் பாபமோ! என் துர்பாக்கியமோ! நீரே என்னைக் கைவிட்டு விட்டால் என்னை இனி யார் ரக்ஷிப்பார்கள்?

தேவா! உமது சுந்தர வதனத்தையும், முறுவலையும், திருவடிகளையும் யார் பார்க்கப் போகிறார்களோ அவர்களே உலகில் பாக்கியவான்கள். நானோ உமது சேவை பெறாமல் வீணே இங்கு உயிரோடுயிருக்கிறேன்  . என் பிரிவால் நீர் என்ன கஷ்டப்படுகிறீரோ? உமது கஷ்டத்திற்காகவே பிறந்த பெண்ணாகி விட்டேனே!

அந்தோ! அன்று லக்ஷ்மணன் உம்மிடம் வந்து என்ன சொன்னாரோ? அவரைக் கடிந்து பேசி விட்டேனே! திரும்பி வந்து ஆஸ்ரமத்தில் என்னைத் தேடி இருப்பீர்கள். ஜடாயு நீர் வரும் வரை உயிரோடு இருந்து சொன்னாரோ தெரியவில்லேயே! அந்த வானரர்கள் என் பூஷணங்களை தந்தார்களோ? என்ன வாயிற்றோ அறியேன்? இங்கு தூக்கமின்றி ஆகாரமின்றி தவிக்கிறேன். இந்த கடிய சொற்களைக் கேட்க முடியவில்லை. என் பிரபுவே! எப்போ உம்மைப் பார்ப்பேனோ?

என் ப்ராணநாதா! நான் உம்மைத் தவிர வேறு தெய்வத்தை அறியேனே! உமது கருணை எனக்கு எப்போதும் உண்டு என்று நம்பி, உமது பரிவை நான் பார்க்க வேண்டியல்லவா என்னை நானே ரக்ஷித்துக் கொள்ளாமல் பொறுமையுடன் இருந்து வருகிறேன். அன்ய புருஷன் வீட்டில் சாப்பிட விரும்பாமல் பல மாதங்களாய் உபவாசத்துடன் இருந்து வருகிறேன். நல்ல படுக்கையின்றி இந்த மரத்தடியில் கட்டாந்தரையில் சயனித்து உமக்காகத் தவம் கிடக்கிறேனே! அவரவர் தர்மம் அவரவரைக் காப்பாற்றும் என்பார்களே! என் கற்பு என்னைக் காப்பாற்றவில்லேயே! நன்றி கெட்டவர்களுக்கு செய்த உபகாரம் போல் என் கற்பும் பயனற்றுப் போய்விட்டதோ? பயனற்றுப் போனாலும் கற்பை நான் விட மாட்டேன். ஆனால்  என் உயிரை நான் விட்டு விடுவேன். இதுவே உசிதம். என் ப்ராணவல்லபா! வாழ்ந்தால் உமக்காக வாழ வேண்டும். இனி யாருக்காக வாழ வேண்டும்?

இவ்வாறு புலம்பி அழுது, கடந்த பத்து மாதங்களாக தைரியத்துடன் காத்திருந்த தேவி, இன்று தைரியத்தை இழந்து விட்டாள். உயிரை விட்டு விடுவது என்று நினைத்து தன்  நீண்ட பின்னலையே கழுத்தில் கயிறாக கட்டிக்கொண்டு, சிம்சுபா வ்ருக்ஷத்தின் கிளையில் கட்டிக்கொண்டு, தொங்கிவிட நினைத்து அந்தக் கிளையைப் பார்த்தாள்.

இதைக்கண்டு ஹனுமான் திடுக்கிட்டார். இவளுடைய  எண்ணத்தைப் புரிந்து கொண்டார். இவளுக்கு இந்த சமயம் ஆறுதல் கூறாது போனால் பெரிய நஷ்டம் என்று கருதினார். திடீரென்ன குதித்தாள் அவள் பயப்படுவாள் என்று கருதி மெல்லிய குரலில் இராமகதையை மதுரமாகப் பாடினார். இதைக்கேட்ட தேவி அச்சர்யப்பட்டாள். இங்கு இராமகதையை சொல்லுவது யாரோ? இது ப்ரமேயோ? இது கனவோ? என்று நினைத்தாள். சந்தோஷத்துடன் கமலம் போன்ற முகத்தைத் தூக்கி உயரே பார்த்தாள். ஹனுமான் வினயத்துடன் கிட்டே வந்து கொண்டிருந்தார். முதலில் இராவணன் தான் இந்த உருவில் வருகிறானோ என்று நினைத்து பயப்பட்டாள். ஹனுமனோ வந்து தேவியை அடிபணிந்தார். ஹனுமானின் ஆஜ்வத்தைக் கண்டு தேவி சந்தேகம் தெளிந்தாள்.

“தசரதராஜ குமாரனான இராமன் தன் தம்பி லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் பித்ருவாக்ய பரிபாலனம் செய்ய வேண்டி பதினான்கு வருஷம் வனவாசம் செய்து வந்தான். அவர்கள் தண்டகாரண்யத்தில் வசிக்கும் போது இராவணன் என்பவன் சீதையை அபஹரித்துப் போய்விட்டான். தேவியைத் தேடிவந்த இராமன் ஜடாயு மூலம் விஷயத்தை அறிந்துக் கொண்டு முக்தியும் அளித்தார். பிறகு கிஷ்கிந்தை வந்து வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடிசூட்டினார். நன்றியுள்ள சுக்ரீவன் தனது சகல  வானரப்படைகளையும் நாற்திசையிலும் சென்று சீதையைத் தேடிவரும்படி அனுப்பினான். அதில் தென்திசை அனுப்பிய வானரர்களுக்குள் அடியேன் கடலைத் தாண்டி இங்கு வந்து இரவு முழுவதும் இலங்கையில் தேவியைத் தேடி இங்கு வந்தேன். தேவி! தாங்கள் யார்? அருந்ததியா? அனுஸுயையா? இந்திராணியா? அல்லது நான் தேடிவந்த சீதை தானோ? நான் வாயுகுமாரன். இராமதூதனாய் வந்துள்ளேன். என் பெயர் ஹனுமான் என்று சொன்னார்.

இதைக் கேட்டு தேவி பரிபூர்ண மகிழ்ச்சியடைந்து, “அப்பா! நீ வானரன் என்கிறாய். வானர்களுக்கும் மனிதர்களுக்கும் எப்படி நட்பு ஏற்படும்? இராமனை நீ எப்படி சந்தித்தாய்? சொல் என்றாள். உடனே ஹனுமான், “தேவி, உமது சங்கல்பமில்லாது பெருமாளின் திருவருள் கைகூடுமோ? நீங்கள் தானே திருவாபரணங்களைக் கழற்றி, ஒரு துணியில் முடித்து எங்களுக்கும் பெருமாளுக்கும் சக்யம் ஏற்படட்டும் என்று சங்கல்பித்து எங்களிடம் போட்டுச் சென்றீர்கள். அந்த சங்கல்பம் பலித்து விட்டது” என்றார் ஹனுமார்.

ஸீதை சந்தோஷமடைந்து ”வானர சிரேஷ்ட! நீ ராமதூதனாகில் இராமபிரானின் ரூபலாவண்யத்தைச் சொல்” என்றாள். உடனே ஹனுமான் மஹாபுருஷனான ராமபிரானின் திருமேனியில் உள்ள சகல சாமுத்ரிகா லக்ஷணங்களையும் உள்ளது உள்ளபடி வர்ணித்தார். இதைக்கேட்டு தேவி மேலும் பரமானந்தம் அடைந்தாள். ஹனுமான் மேலும் இராமபிரானின் கல்யாண குணங்களையே சொல்லி, அவள் காதையும், உள்ளத்தையும் நிரப்பினார் .முடிவில் தான் கொண்டுவந்த கணையாழியைக் காட்டினார்.

         “ராமநாமாங்கிதம் சேதம் பஸ்ய தேவ்யங்குளீயகம்”

ராம நாமாங்கிதமான இந்த மோதிரத்தையும் ஹே தேவீ !காண்பீராக! என்று காட்டவே, ஸீதை உடனே எடுத்துக் கொண்டாள். அந்த ஸீதை பர்த்தாவின் கணையாழியைப் பெற்றுக்கொண்டு, அதை நோக்கி கணவனையே அடைந்தது போல் சந்தோஷமடைந்தவளாக ஆனாள்.

கைநீட்டி யாரிடமும் எதையும் வாங்காத பிராட்டியின் கௌரவம் அறிந்து ஹனுமான் மோதிரத்தைக் கொடுக்க வராமல் “பச்ய தேவீ” என்று சொல்லிக் காண்பித்தார். பிராட்டியும் அதைக் கண்டு உரிமையுடன் பாய்ந்து எடுத்துக் கொண்டாள் என்பதோடன்றி பார்த்தாள் என்கிறார். தன் கண்களில் ஆனந்த பாஷ்பம் உதிர பார்த்து கண்களில் ஒத்திக் கொண்டு, தன் சிரசின் மேல் வைத்து, இதயத்தில் சாத்திக் கொண்டு, மறுபடியும் மறுபடியும் ப்ரேமையுடன் பார்த்தாள். பர்த்தாவின் கரவிபூஷணம் என்பதால் அவள் எவ்வளவு ஆனந்தமும் நிம்மதியும் அடைந்திருப்பாளோ அது வர்ணிக்கத்தரமில்லை. பகவத் சம்பந்தமான வஸ்துவிற்கும் பகவானுக்கும் பேதமில்லை. பர்தாவின் சம்பந்தப்பட்ட எதுவும் பதிவ்ரதைக்கு உகப்பையே தருமல்லவா? இராமனின் மோதிரத்தை அடைந்து ராமனையே அடைந்து விட்ட ஆனந்தத்தை அடைந்தாள். தங்கம், ரத்னம் இவைகளாலான மோதிரம் அது. அதில் உள்ள எந்த அம்சமும் இராமனுக்கு சமமாகாது. ஆனால்” ராமநாமாங்கிதம்” என்றபடி அதிலுள்ள ராம நாமமே இராமனுக்கு சமமாகும். நாமிக்கும் நாமத்திற்கும் பேதமில்லை. ஆனால் ஒரு பேதமுண்டு. நாமியை விட நாமத்திற்கே கருணையுண்டு. நாமியான இராமன் சமுத்திரத்தில் அணைபோட்டுத்தாண்டி இராவணவதம் செய்த பிறகே ஸீதையிடம் வரமுடியும். ராம நாமமோ முன்னதாகவே ஆசார்யன் மூலம் தேடி வந்து விடுகிறது. எனவே ராமா நாமத்தைப் பார்த்த ஸீதை தன் துயரமெல்லாம் முடிந்து விட்டதாக நினைத்தாள். உடனே ஸீதை ஹநுமானைப் பார்த்து கொண்டாடினாள்.

ஹனுமானே! இராமர் எப்பேர்ப்பட்ட பிரபுவோ அப்பேற்பட்ட தூதன் நீ! இல்லேயேல் சாதாரண ஒருவனை என்னிடம் அனுப்புவாரா? நீர் சமர்த்தன்; நீர் பராக்கிரமசாலி, உமக்கு ஈடு உலகில் இல்லை. பல்லாண்டு சிரஞ்சீவியாக இருப்பீர் என்றாள். அதற்கு ஹனுமான் “தாயே! எல்லாம் தங்களுடையும், இராமருடையும்  கிருபையே” என்றாள்.

ஸீதா ஹனுமத் சம்வாதம்

கணையாழியைப் பெற்று நிம்மதியும் மகிழ்ச்சியும் பெற்ற ஸீதை, ஹநுமானை இவ்வாறு பலவாறு புகழ்ந்தாள். பிறகு தன் பர்த்தா இருக்கும் நிலைமையைக் கேட்டாள்.

“ஹனுமானே! நீ அந்த ப்ரபுவான  ராமனை அணுகி சேவித்து வருவாய் என்று நினைக்கிறன். அவருடைய பழக்கவழக்கங்கள் எப்படி என்று சொல்லுவாய்! என்னை ஏன் உபேக்ஷித்து விட்டார்? அவருக்கு என் நினைவு உள்ளதா? பின் ஏன் என்னை ரக்ஷிக்க முயற்சிக்கவில்லை? நான் பிரிந்த பிறகு எதிலும் விரக்தி அடைந்து விட்டாரோ? உடம்பு நலமாக இருக்கிறாரா? இளைக்காமல்  இருக்கிறாரா? நன்றாகச் சாப்ப்பிடுகிறாரா? நன்றாக உறங்குகிறாரா? அல்லது எப்போதும் வருத்தப்படுகிறாரா ?

அவர் தைர்யமாக இருந்தால் தானே எனக்கு தைர்யம். அயோத்திக்கு சொல்லி அனுப்பி இருக்கிறாரா? பரதனிடமிருந்து சேனையை எதிர்பார்த்திருக்கிறாரா? பின் ஏன் இவ்வளவு தாமதம்? என்னை மறந்து விட்டாரா? முயற்சி ஏதுமின்றி தெய்வமே என்று உட்கார்ந்து விட்டாரா? அல்லது தெய்வானு கூலமின்றி முயற்சி எடுத்துத் தோற்றுப் போய் அலுப்பை அடைந்து விட்டாரா? தெய்வானுகூலம், மனித முயற்சி இந்த இரண்டும் சேர்த்து தான் பயன் தரும் என்று என் அபிப்ராயம். வானர வீரா! நீ ஒருவன் தான் எனக்கு வ்ருத்தாந்தத்தை சொல்ல ஒரு பந்துவாகக் கிடைத்தாய். எனவே எல்லாவற்றையும் சொல்லேன்.

இவ்வாறு தேவியின் வாக்கைக் கேட்ட ஹனுமான் சொல்லலானார். அம்மா! அவர் உங்களை மறக்கவே இல்லை. அல்லும் பகலும் “ஸீதே! ஸீதே!” என்று வாயாராக் கூவி கண்ணீர் பெருக்கிறார். இரவு தூக்கமில்லை. மிகவும் வற்புறுத்தலின் பேரில் பழங்களை மட்டும் உட்கொள்கிறார். கட்டாந்தரையிலேயே படுத்துப் புரளுகிறார். மிகவும் இளைத்து  போய்விட்டார். உம்மிடம் மிகவும் ப்ரீதி வைத்துள்ளார். எப்போதும் உமது விரஹத்தினாலேயே வேதனைப் படுகிறார். உம்மைத் தேடி அடைய அவர் முயற்சி செய்து கொண்டுள்ளார் என்பதற்கு நான் கடலைத் தாண்டி இங்கு வந்துள்ளேதே ப்ரமாணமாகும்.

சுக்ரீவன் அவருடைய உற்ற நண்பனாவான். அளவு கடந்த வானரசேனை கிடைத்து விட்டதால் பரதனிடமிருந்து சேனையை எதிர்பார்க்கவில்லை. நான் போய்ச் சொன்னதும் வானரப்படையுடன் கடலில் அணை போட்டோ அல்லது கடலை வற்றச் செய்தோ இங்கு வந்து விடுவார். நீங்கள் அதுவரை பொறுத்திருங்கள். சீக்கிரமே அந்த ப்ரபுவைப் பார்த்துவிடப் போகிறீர்கள். இனி உங்கள் கஷ்டகாலம் தீர்ந்து விட்டது. அல்லது நான் உங்களை இப்போதே தோளில் தூக்கிச் சென்று இராமபிரானிடம் ஒப்படைப்பேன் என்றார்.

அதைக் கேட்ட ஸீதை ஆச்சர்யத்துடன் ஹநுமானைப் பார்த்து “குழந்தாய்! அது எப்படி முடியும்? அது மாதிரி சாஹசம் செய்யாதே. நீயோ ஒருவன். கடலை எப்படித் தாண்டுவாய்? அந்த சமயம் பல அரக்கர்கள் உன்னைத் தாக்கினால் என்ன செய்வாய்?” என்று கேட்டாள். இது நமக்கு புதிய அவமானம் என்று நினைத்த ஹனுமான் ஸீதையைப் பார்த்து,” தாயே! “எனக்கு முடியாத காரியமே கிடையாது. நான் தங்களிடம் ஒரு சாதாரண வானரனை போல் பேசிக் கொண்டுள்ளேன். இதோ என் திவ்யரூபத்தைப் பாருங்கள்” என்று சொல்லி தன் பெரிய ரூபத்தைக் காட்டினார்.

மலைப்போன்ற மிகப்பெரிய ரூபத்தைப் பார்த்தும் ஸீதை பயப்படவில்லை., உடனே ஸீதை ஹநுமானைப் பார்த்து, “வாயுகுமாரா! நீ ஒருவனே இராவணனையும் சர்வ இலங்கையையும் நாசம் செய்யப் போதுமானவன். ஆயினும் இராமனின் புகழைக் கெடுத்து விடாதே. அவரே இங்கு வந்து சத்ருவை வென்று, என்னை மீட்பாராகில் அதுதான் அவருடைய பெருமைக்கு அழகு. எனவே அவரையே அழைத்து வா. இதுவரை நான் பரப்புருஷனை புத்திபூர்வமாய் தீண்டியதில்லை. நானே உன்னுடன் வர உடன்படுவேனானால் அது என் கற்புக்கும் அழகல்ல. எனவே நான் இன்னும் ஒரு மாத காலம் பொறுத்திருப்பேன். அதற்குள் இராமனை வரச் சொல்லு. அது உன் கையில்தான் இருக்கிறது என்றாள்.

இதைக்கேட்ட ஹனுமான்,” தேவி இத்தகைய வார்த்தை உமக்கே பொருத்தம். ஏனெனில் நீர் லோகநாதனான அந்த பிரபுவின் தர்ம பத்தினியன்றோ? நான் ஆலோசிக்காமல் பேசிவிட்டேன். என்னைத் தவறுதலாக நினைக்கலாகாது. மன்னித்தருள வேண்டும். அந்த பிரபுவிற்கு நான் என்ன அடையாளம் தருவது, என்ன செய்தி சொல்லுவது? இரண்டையும் தெரிவிப்பீர்களாக. தங்கள் அனுமதி பெற்று நான் இனி சீக்கிரம் ராமனிடம் செல்லத்  தயாராக இருக்கிறேன்” என்றார்.

அதற்கு ஸீதை வெகு மதிப்புடன் ஹநுமானைப் பார்த்து “வாயு குமாரா! மஹாவீரா! நாங்கள் இருவரும் ஒரு சமயம் சித்ரகூடத்தில் இருக்கையில் இந்திரபுத்திரன் ஜெயந்தன் என்பவன் காக்கை ரூபத்தில் வந்து என்னை தீண்டினான். எனக்குத் திருமேனியில் ரத்தம் வந்து விட்டது. இதைக் கண்ட இராமன் அந்த அற்பன் விஷயத்தில் ப்ரஹ்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து விட்டார். என்னிடம் உள்ள பரிவினால் ஒரு அல்பன் விஷயத்தில் ப்ரஹ்மாஸ்திரம் பிரயோகம் செய்த அவர், இந்த இராவணன் விஷயத்தில் ஏன் பாரமுகமாய் இருக்கிறார்? என்னிடம் அலட்சியமா? அந்த ஜெயந்தன் மூவுலகம் பயந்து ஓடினான். யாரும் அவனை  ரக்ஷிக்கவில்லை. பிறகு இராமபிரான் திருவடியிலேயே வந்து விழுந்தான். அப்போதும் இராமன் கோபமாகவே இருந்தார். என் கடாக்ஷத்தினால் என் திருவுள்ளக் குறிப்பறிந்து அந்த காகாசுரனக்கு அபயம் தந்து விட்டார். ப்ரம்மாஸ்திரம் அமோகமானது. எனவே ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டார். அவனை உயிரோடு விட்டுவிட்டார். இந்தக் கதையை இராமரிடம் தெரிவிப்பாயாக.

மேலும் அன்று இராமன் எனக்கு மிகவும் அழகாக மனசிலை என்ற தாதுவால் ஒரு திலகம் இட்டுவிட்டார். நாங்கள் இருவரும் காட்டில் உலாவினோம். அப்போது அங்கு வந்த குரங்கைப் பார்த்து நான் பயந்து கொண்டு ஓடி அவரைக் கட்டிக் கொண்டேன். என் திலகம் அவர் கன்னத்தில் ஒட்டிக் கொண்டது. அதையும் தெரிவிப்பாயாக. இந்த சம்பவங்கள் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். எனவே நீ சொன்னால் அவர் சந்தோஷப்படுவார். மேலும் இந்த சூடாமணியை அவரிடம் கொடு. இது கௌசல்யை மாமியினுடையது. மிக விலைமதிப்பான இதை என் மாமனார் தசரதர் என் கல்யாணத்தின்போது எனக்குத் தந்து விட்டார். எனவே இதைக் கண்டால் இராமருக்கு எங்கள் மூவரின் நினைவு வரும். கோசலை மாமிக்கும் மாமனாருக்கும் உகந்த மாட்டுப்பெண் என்பதற்காகவது என்னை ரக்ஷிக்க மாட்டாரா?

ஹனுமான் பக்தியுடன் பணிந்து விட்டு, அந்த சூடாமணியைப் பெற்றுக் கொண்டார். புறப்பட்டு விட்ட ஹநுமானைப் பார்த்து மேலும் ஸீதை சொன்னாள் “குழந்தாய் என் பிரமாணத்தை அந்த பிரபுவான ராமரிடம் சொல்லு. லக்ஷ்மணரிடமும் என் வணக்கத்தைச் சொல்லு. அவர் என் மாமனாருக்கு சமமானவர். என்னை தாயாராக பாவித்திருந்த போதிலும் அவரைக் கண்டால் எனக்கு தசரதர் என்று தான் தோன்றும். ஏனெனில் எங்கள் இருவரையும் காட்டில் அப்படிக் காப்பாற்றி வருவார். நாங்கள் குழந்தைகள்போல் நிம்மதியாகத் திரிவோம். அவரோ பெரியவர் போலே  எங்கள் பொறுப்பை எல்லாம் சுமப்பார். இராமனுக்கு என்னைவிட ப்ரியமானவர். அவரையும் விசாரித்ததாகச் சொல்லு. ஊரில் உள்ள என் மாமிகள் பரதன் முதலிய மற்ற பந்துகள் யாவரையும் விசாரித்ததாக இராமரிடம் சொல்லு. சுக்ரீவனிடம் என் மங்களாசாஸனத்தை தெரிவி. என் நாதனுக்கு நண்பன் என்பதாலேயே அவர் என் மதிப்புக்குரியவர். அப்பா,” நீ இங்கு அசோகவனத்தில் ஏதாவது பழமோ, காயோ சாப்பிட்டு விட்டு ஒரு நாள் விச்ராந்தி எடுத்துக் கொண்டு போவாயாக. உன்னை உபசரிக்காமல் அனுப்ப எனக்கு இஷ்டமில்லை” என்றாள்.

ஸீதையின் பரிவைக் கண்டு ஹனுமான் ஆனந்தக் கண்ணீர் விட்டார். மறுபடியும் மறுபடியும் திருவடி தொழுதார். விடைப் பெற்றுக் கொண்டார் . இதே வேகத்தில் போய்  இராமனை அழைத்து வருவதாக உறுதி கூறினார். ஸீதை நிம்மதி அடைந்தாள். ஆபத்தில் தனது ஒரு பந்துவாக வந்த ஹனுமனை விட்டுப் பிரியமுடியாமல் தவித்தாள். ஹநுமானை மங்கலமாய்ப் போய்வரும்படி கருணையுடன் கடாக்ஷம் செய்தாள். ஹனுமானும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே விடை பெற்றார். தான் க்ருத க்ருத்யனாகி விட்டதாய் பூரிப்படைந்தார்.

ஹனுமான் செய்த யுத்தம்

ஹனுமான் விடைபெற்றுச் சென்றதுமே ராக்ஷஸிகள் ஸீதையைப் பார்த்து “உன்னோடு பேசிக் கொண்டிருந்தது யார்” என்று மிரட்டினார்கள். அதற்கு ஸீதை- பாம்பின் கால் பாம்பே அறியும். நானும் ஏதோ ராக்ஷஸன் என்றுதான் ஸந்தேஹித்தேன் என்றாள். பர்த்தாவால் அனுப்பப்பட்ட தூதனை காட்டிக் கொடுப்பது பதிக்குச் செய்யும் துரோகமாகும். எனவே ஸீதை மறைத்துப் பேசினாள். ஸீதை முதலில் ஹனுமனை இராவணனோ என்று சந்தேகித்ததும் உண்மையாதலால் அப்படிச் சொன்னாள்.

ஹனுமானோ ஸீதையினிடம் விடைபெற்ற பிறகு அசோகவனத்தில் தன் இஷ்டப்படி விளையாட ஆரம்பித்தார். மரங்களை பிடுங்கித் தள்ளினார், முறித்தார். கட்டிடங்களை இடித்தார். காய்கனிகளை உதிர்த்தார். புஷ்பங்களைக் கசக்கினார். அசோகவனத்தை அலங்கோலமாக்கினார். இதைக் கண்ட ராக்ஷஸிகள் பயந்து இராவணனிடம் ஓடி தெரிவித்தனர்.

ராவணன் முதலில் சாதாரண குரங்கு என்று நினைத்து அலட்சியம் செய்தான். எனவே சில ராக்ஷஸர்களை அனுப்பி அந்த குரங்கை விரட்டும்படி அனுப்பினான். வந்த ராக்ஷஸர்கள் அனைவரையும் ஹனுமான் பிடுங்கிய மரங்களால் அடித்துக் கொன்றார். தப்பி ஓடிய சிலர் இராவணனிடம் சென்று தெரிவித்தனர். கோபம் அடைந்த ராவணனோ ஒரு ராக்ஷஸ படையையே அனுப்பினான். ஹனுமான் அந்த ராக்ஷஸ படையை ஒரு நொடிப் பொழுதில் நாசமாக்கி விட்டார். பிறகு இராவணன் ஐந்து சேனாதிபதிகளை அனுப்பினான். ஹனுமான் அவர்களையும் கொன்றுவிட்டார். பிறகு இராவணன் ஜம்புமாலி என்ற மிகக் கொடிய ராக்ஷஸனை அனுப்பினான். .அந்த ராக்ஷஸன் வெகுநேரம் யுத்தம் செய்து, பிறகு ஹனுமானால் அடிக்கப்பட்டு மாண்டு போனான். ஹனுமானின் பராக்ரமத்தைக் கண்டு இராவணன் ஆச்சரியப்பட்டான். அக்ஷகுமாரன் என்னும் தன் மகனை அனுப்பினான். ஹனுமான் அவனையும் அனாயசமாய் அடித்துக் கொன்று விட்டார். இது கேட்டு இராவணன் கவலையும் துக்கமும் அடைந்தான்.

ஹனுமானுக்கு குஷி உண்டாகி விட்டது. எனவே கோபுரவாசலில் உட்கார்ந்து பஜனை செய்ய ஆரம்பித்து விட்டார். அவராகவே ஒரு பஜனைப்பாட்டு  பாடினார். அது பின் வருமாறு:

“மஹாபலம் பொருந்திய இராமனுக்கு ஜெய்! மகா பலசாலியான லக்ஷ்மணனுக்கு ஜெய்! இராமரால் பரிபாலிக்கப்படும் சுக்ரீவ மகாராஜாவுக்கு ஜெய்! அனாயசமாய் காரியங்களை செய்து முடிக்கும் ராமபிரானுடைய தாசன்  நான்! என் பெயர் ஹனுமான். நான் வாயு குமாரன். சத்ரு சைன்யங்களை ஒழிப்பவன் நான். மரங்களாலும் கற்களாலும் யுத்தம் செய்யும் எனக்கு, ஆயிரம் இராவணன் வந்தாலும் போதுமானதாகாது. இந்த இலங்கையை நாசம் செய்துவிட்டு ஸீதையை வணங்கி விட்டு இந்த ஊரில் வீதிகள் தோறும் ராமநாமத்தை கோஷித்துவிட்டு எல்லா ராக்ஷஸர்களும்  பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் காரியங்களை சாதித்திக் கொண்டு நான் சௌக்யமாய் ஊர் திரும்புவேன் என்றார்.

ஹனுமானின் இந்த கோஷத்தைக் கண்டு யாவரும் ஆச்சரியப்பட்டனர். அங்குள்ள ஒரு காளிகோயிலை இடித்து, அந்த கற்களை குவித்து வைத்துக் கொண்டார். மரங்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டார். கோபுரவாசலில் உட்கார்ந்து முண்டாதட்டி ஆர்ப்பாட்டம் செய்தார். எல்லா ராக்ஷஸர்களையும் யுத்தத்திற்கு அழைத்தார். இந்த குரங்கின் மஹிமையைக் கண்டு ராவணனே வெட்கினான்.  இது சாதாரண குரங்கு இல்லை என்று உணர்ந்தான். ஏதோ ஒரு தெய்வமே குரங்கு வடிவத்தில் வந்திருப்பதாக அறிந்தான். எனவே அவனே புறப்பட்டுவரத் தயாரானான். இதற்குள் இந்திரஜித் வந்து சேர்ந்தான். தந்தையை வணங்கி தானே சென்று ஹனுமானை பிடித்து வருவதாகச் சொன்னான் .

ஹநுமானைக் கொன்று விடாதே. அவனைப் பிடித்து வா. யார் என்று விசாரிக்கலாம் என்றான் இராவணன். அந்த ஹனுமான் பொல்லாதவன். என் அருமை மகனே! நீயும் அந்த குரங்கினிடம் பலியாகி விடாதே. முதலில் கவனத்துடன் உன்னைக் காப்பாற்றிக் கொள். பிறகு அந்த குரங்கைப் பிடித்துவா என்று அனுப்பினான். இந்திரஜித்தும் ரதத்தில் ஏறி போதுமான படையுடன் மிக உத்சாகமாக வந்தான். இந்திரஜித்தைக் கண்ட ஹனுமான் கோலாஹலமடைந்து பழைய பாட்டைப் பாடிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இந்திரஜித்துக்கும் ஹனுமானுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பமாகியது. இந்திரஜித் பல அஸ்த்ரங்களையும் சஸ்திரங்களையும் ஹனுமான் மேல் பொழிந்தான். ஹனுமானும் சளைக்கவில்லை. மரங்களையும் கற்களையும் அவன்மேல் வீசினார். இந்திரஜித்தும் அவைகளை தனது பாணங்களால் பொடி பொடியாக்கினான். ஹனுமான் மிகவும் கோபம் கொண்டு இந்திரஜித்தின் படையை அழித்து விட்டார். இந்திரஜித்தால் சமாளிக்க முடியவில்லை. அதைர்யமடைந்தான். எனவே ப்ரம்மாஸ்திரத்தை எடுத்து ஹனுமான் மேல் போட்டுவிட்டான். ஹனுமானை  ப்ரம்மாஸ்திரம் ஏதும் செய்துவிட முடியாது. ஏனெனில் ப்ரஹ்மாவே அப்படி வரம் தந்துள்ளார். ஆயினும் ஹனுமான் அந்த அஸ்திரத்தை மதித்து சற்று நேரம் மூர்ச்சை அடைந்தது போல் வீழ்ந்து கிடந்தார். ஹனுமானின் மஹிமையை அறியாத அரக்கர்கள் சணல் கயிறுகளைக் கொண்டு வந்து ஹனுமானைக் கட்டினார்கள். ப்ரம்மாஸ்திரத்துக்கு இது அவமானமாயிற்று. எனவே அஸ்த்ரம் விட்டுப் போய்விட்டது. ஹனுமான் இதை அறிந்தும் அந்த சணல் கயிற்றுக்கு கட்டுப்பட்டிருந்தார். ஏனெனில் இராவணனைக் கண்டு பேச நினைத்தார்.

ராக்ஷஸர்கள் இந்திரஜித்துடன் ஹனுமானைக் கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டே இராவணனுடைய தர்பாருக்கு சென்றனர்.

 ஹனுமான் இராவணனுக்கு உபதேசித்தல்

தர்பாருக்கு வந்த ஹனுமான் மிக கம்பீரமாகவே இருந்தார். ஹனுமானைக் கண்டு அவன்  தன்னையறியாமலேயே மரியாதை செய்தான். கைலாசத்திலிருந்து நந்திகேஸ்வரனே வந்துள்ளாரோ என்று நினைத்தான். ஒரு சமயம் இராவணன் கைலாசம் சென்றான். அப்போது வழியில் இருந்த நந்திகேஸ்வரர், சிவபெருமானும் பார்வதியும் ஏகாந்தமாய் இருப்பதால் உள்ளே போகக்கூடாது என்று தடுத்து விட்டார். உடனே கோபம் அடைந்த இராவணன்,”சீ குரங்கே உன்னை யார் கேட்டது“ என்று அவமதித்து விட்டான். கோபம் அடைந்த நந்திகேஸ்வரன்,” ராவணா!, நீ என்னை குரங்கு என்று அவமதித்தாய். குரங்கினாலேயே உனக்கு மரணம் ஏற்படும்” என்று சபித்தார். ராவணனுக்கு அது நினைவு வந்தது. இராவணன் சிவபக்தன். ஹனுமானிடம் சிவாம்சமும் இருந்தது. எனவே ஹநுமானைக் கண்டு மரியாதையே உண்டாயிற்று. பக்கத்திலுள்ள ப்ரஹஸ்தன் என்ற மந்திரியைப் பார்த்து “இவன் யார்? என்று விசாரி. இவன் விஷ்ணு தூதனா? யம தூதனா? அல்லது இந்திரன்,அக்னி,வாயு முதலிய எந்த தேவர்களின் பிரேரணையால் வந்திருக்கிறான் என்று கேள்” என்றான்.

இராவணன் ப்ரஹஸ்தனைப் பார்த்து இப்படி சொன்னதும், ஹனுமான் ராவணனைப் பார்த்து நேரடியாகப் பேச தொடங்கினார்.

“ஹே ராக்ஷஸ ராஜேந்திரா! நான் விஷ்ணு தூதனுமில்லை; யம தூதனுமில்லை. நான் ஒரு வானரன். வாயுகுமாரன் நான். என் பெயர் ஹனுமான். நீ சீதாதேவியை பஞ்சவடியிலுருந்து அபகரித்து இங்கு சிறை வைத்துள்ளாயே, அந்த ஸீதையின் பர்த்தாவான ராமபிரானின் தூதனாக வந்துள்ளேன். அந்த ராமபிரான் ஸீதையைத் தேடிக்கொண்டே கிஷ்கிந்தைக்கு வந்தார். சுக்ரீவனுக்கும் ராமபிரானுக்கும் நட்பு உண்டாயிற்று. எனவே சுக்ரீவனின் நன்மைக்காக ராமர் வாலியை ஒரே பாணத்தால் அழித்து விட்டார். உனக்குத்தான் வாலியைத் தெரியுமே! அந்த வாலி மாண்டு போய்விட்டான். நன்றியுள்ள சுக்ரீவன் ஸீதையைத் தேடிவர வானரப்படையை அனுப்பினான். நான் கடலைத் தாண்டி இங்கு வந்து அசோகவனத்தில் ஸீதையைக் கண்டு பேசினேன். உன்னையும் கண்டுபேச நினைத்தேன். என்னை சாதாரணக் குரங்கு என்று நினைத்து யாரும் உள்ளே விடமாட்டார் என்று எண்ணி நான் அசோகவனத்தை அழித்தாலன்றி உன்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்காது என்று தான் அழித்தேன். யாருக்கும் தன் உடம்பில் ஆசை உண்டு. தன்னை அடிக்கும்போது திரும்பி அடிக்காமல் இருக்கமுடியுமா? ராக்ஷஸர்கள் என்னை அடித்தார்கள். நான் திரும்பி அடித்தேன். நான் அடித்ததுமே அவர்கள் மாண்டு போனார்கள். பிறகு இந்திரஜித்து போட்ட ப்ரம்மாஸ்திரத்த்ற்கு கட்டுப்பட்டு இங்கு வந்தேன். உனக்கு ஒரு புத்திமதி சொல்வேன். கவனமாக கேள்:-

உன்னிடத்தில் எனக்கு த்வேஷமில்லை. த்வேஷமிருந்தால் “ராக்ஷஸாதம” என்று திட்டி இருப்பேன். உன் மஹிமையை நான் உணருகிறேன். எனவே “ராக்ஷஸ ராஜேந்திரா” என்று அழைக்கிறேன். என் வசனத்தைக் கேள். நான் சத்யமாகச் சொல்லுகிறேன். நான் சொல்லுவது உண்மை என்று நீ உணரவேண்டும். நான் பொய் பேசமாட்டேன். ஏனெனில் நான் ராமதாஸன். சத்யத்தைக் காப்பாற்ற வேண்டி நாடு நகரமிழந்து காட்டில் அலையும் அந்த பிரபுவின் தாஸனாக இருந்துக்கொண்டு நான் எப்படி பொய் சொல்ல முடியும்? மேலும் நான் தூதன். சொன்னது சொன்னபடி சொல்ல வேண்டியது தவிர வேறு எனக்கு இங்கு அபிமானம் தனியாக இல்லை. நான் உங்கள் இருவருக்கும் மத்யஸ்தான் தானே. விசேஷமாய் வானரன் கூட. ராமனோ நரன். நீயோ ராக்ஷஸன். நான் இரண்டு கெட்டானா வானரன். எனக்கு இங்கு ஜாதி அபிமானத்திற்கு ஹேதுமில்லை. வானரர்கள் எப்போதும் ஸத்யஸந்தர்கள். நேர்மை உள்ளவர்கள். நயவஞ்சகம் செய்ய மாட்டார்கள். அத்தகைய நான் எதற்கு பொய் சொல்லப் போகிறேன்? எனவே நான் சொல்வதை சத்யமென்னும், உனக்கு ஹிதமென்னும் கருது என்றார். மேலே சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறார்:-

“ராவணா! நீ ராமனை சாதாரண மனிதனாகக் கருதுகிறாய். ஸீதையையும் சாதாரண ஸ்திரீயாகக் கருதுகிறாய். உண்மையில் இராமன் உலகுக்கு காரணமான பரமாத்மாவே. இராமன் நினைத்தால் இவ்வுலகம் அழித்துவிட்டு பிறகு உடனே உள்ளது உள்ளபடி படைத்து விடவும் வல்லவர். சீதையைப் பிரளயத்திலும் அழியாத பராசக்தியாகவே நினை. நான் சொல்லுவது உனக்கு பொய்யாகாத் தோன்றலாம். ஆனாலும் அந்த ஸீதையின் கற்பு என்னும் அக்னியால் இந்த இலங்கையே பொசுங்க போகிறது. அப்போது நீ உணருவாய். பிரம்மா, ருத்திரன், இந்திரன் முதலிய எந்த தெய்வங்களாலும் இராமனை அடக்க முடியாது. இராமன் இம்மூன்றுக்கும் மேற்பட்ட பரதத்தவம்.

ப்ரஹ்மாவை தவ வலிமையாலும், ருத்ரனை பக்தியாலும், இந்திரனை பராக்ரமித்தாலும் நீ அடக்கிவிட்டாய். அவர்கள் உனக்கு அடங்கினவர்கள். இராமனுடன் அவர்களை யுத்தத்திற்கு அனுப்பி விடலாம் என்று நினைப்பாய். அவர்கள் ராம்த்ரோஹியான உன்னைக் காப்பாற்ற சக்தி அற்றவர்கள்.

நான்கு தலைகள் உடைய பிரம்மா பெரியவர்,ஸ்வயம்பு, என்று எண்ணாதே! அந்த ப்ரஹ்மாவை படைத்தவர் “சஹஸ்ர சீர்ஷா புருஷா” என்றபடி ஆயிரம் தலை உடைய இராமன். நீ பூஜிக்கும் மூன்று கண்கள் உடைய ருத்திரனால் உன்னை காப்பாற்ற முடியும் என்று எண்ணாதே “சஹஸ்ராக்ஷ சஹஸ்ரபாத்” என்றபடி ஆயிரம் கண்கள் உடையவன் இராமன். முப்புரங்களையும் எரித்தவன் என்றிராதே, அந்த ருத்திரனுக்கு மூன்று புரங்களை எரிக்க தானே “பாணமாக” இருந்தவன் இராமன். இந்திரனால காப்பாற்றமுடியும் என்று எண்ணாதே; இராமனே தேவாதிதேவன் “கஸ்யபிப்யதி தேவாஸ்ச்” என்றபடி தேவர்களும் அஞ்சும் வலிமையுடையவன். இவ்வாறு நீ சொல்லும் மும்மூர்த்திகளும் ராமனின் கோபத்திற்கு ஆளாவனைக் காப்பாற்ற சக்தியற்றவர்கள். எனவே நீ அத்தகைய ராமனுடன் விரோதிக்காதே. ஸீதையை ராமனிடம் சமர்பித்துவிட்டு உயிர் தப்புவாயாக என்று சொன்னார்.

லங்காதஹனம்

ஹனுமானின் வார்த்தையைக் கேட்ட இராவணன் கோபமே அடைந்தான். உடனே பக்கத்திலுள்ள ப்ரஹஸ்தனைப் பார்த்து, “இந்தக் குரங்கை கொன்று போடு” என்றான். உடனே விபீஷணன் ராவணனைப் பார்த்து, “இவனைக் கொல்லுவது நியாயமில்லை; ஏனெனில் தூதனைக் கொல்லக்கூடாது” என்று ராஜநீதி தெரிவிக்கிறது. மேலும் இராமனிடம் இவன் போய்ச் சொல்ல வேண்டும். இராமனே நேரில் யுத்தம் செய்ய வரவேண்டுமென்று உமக்கு எண்ணமிருந்தால் இவனை அனுப்பிவிடுங்கள் என்றான். இதைக் கேட்டு இராவணன் “அப்படியானால் இவனுக்கு ஓர் அடையாளம் செய்து அனுப்பலாம். குரங்குகளுக்கு வால் தான் முக்கியம். எனவே வாலில் நெருப்பு மூட்டி அனுப்பிவிடலாம்” என்றான். எல்லா அரக்கர்களும் இதுவே நல்லது என்று ஆமோதித்தார்.

ஹனுமானின் வாலில் நிறைய துணி சுற்றினர். அதில் நெய் வார்த்தனர். ஹனுமான் தன் வாலை வெகு நீளமாகக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அரக்கர் யாவரும் வாலில் தீமூட்டி விட்டனர். ஹனுமானோ கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் ஆர்த்த பக்தரில்லை. ஞானி ஆவார். தனக்க்கேற்பட்டுள்ள துன்பம் தீர பகவானின் நாமத்தை அவர் ஜபிக்கவில்லை. ஆனால் ஹனுமானுக்கு ஏற்பட்ட ஆபத்தை ஸீதாதேவி கேள்விப்பட்டாள். உடனே கதறினாள். அழுதாள். பதறினாள். திட விஸ்வாசத்துடன் ஹனுமானை அக்னிதேவன் காப்பாற்றும்படி சபதம் செய்தாள்.

“நான் என் பதிக்குத் தொண்டு செய்வது உண்மையானால், என் கற்பு என்னும் தவம் பயனுடையதாகில், நான் இராமனைத் தவிர வேறு ஒருவனை சேராத பதிவிரதை என்பது சத்யமாகில், அக்னி ஹனுமானுக்குக் குளிர்ந்து போகட்டும்” என்றாள். சீதைக்கு தன் கற்பில் பூர்ண நம்பிக்கை இருந்தது. எனவே அந்தக் கற்பினால் ஹனுமானைக் காப்பாற்ற எண்ணினாள். சீதையின் கற்பு இலங்கைக்கு தீயாக இருந்தது. “ஆதாய தேனைவ ததாஹ லங்காம்” என்றபடி சீதையின் கற்பாகிய தீயைத்தான் எடுத்து ஹனுமான் இலங்கையைக் கொளுத்தினார் என்பர். சாதாரண அக்னிக்கு இலங்கையைக் கொளுத்த சக்தி ஏது? ஏனினில் அக்னி தேவனும் ராவணனுக்கு அடங்கி கிடக்கிறானே. ஹனுமானுக்கு அபசாரம் செய்த பாபமே இங்கு அக்னி. பாகவத அபசாரத்தை விட அக்னி வேறு ஏது? பாகவதனாகிய ஹனுமனை ஆச்ரயித்து சுக்ரீவன் வாழ்ந்தான். பாகவதனாகிய ஹனுமானுக்கு அபசாரம் செய்து இராவணன் அழிந்து போனான்.

ஹனுமான் வாலில் அக்னி குளிர்ந்து போனான். ஹனுமான் இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்தார். வாயுபகவானும் அக்னிதேவனும் நண்பர்களாக இருப்பதாலும் தான் வாயுகுமாரன் என்பதாலும் அக்னி சுடவில்லை என்றும் அல்லது ஸீதையின் வாத்ஸல்யத்தினால் தன்னை அக்னி சுடவில்லை என்றும் கருதினார். இவ்வாறு வாலில் சுடாது உட்கார்ந்திருக்கும் அக்னி பகவானை தான் பூஜிக்க வேண்டும் என்று கருதினார். அதற்கு வழி இந்த இலங்கை முழுவதும் அக்னிக்கு அர்ப்பணம் செய்துவிடலாம் என்று அவர்க்குத் தோன்றியது.  அதற்குள் அரக்கர்கள் ஹனுமனை வாலில் நெருப்பு வைத்து உலகம் அறிய ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் அரக்கர்கள் ஹநுமானைப் பலவாறு திட்டி அவமதித்தனர். விபீஷணின் வீட்டில் மட்டும் அனுதாபம் காட்டி ஹனுமானுக்கு மரியாதை செய்தனர். எனவே ஹனுமான் விபீஷணன் வீட்டை மட்டும் விட்டு விட்டார். மற்ற எல்லா வீடுகளிலும் தீ வைக்கவேண்டியது நியாயம்தான் என்று தீர்மானித்துக் கொண்டார். உடனே துள்ளி எழுந்தார். வாலை சுழற்றி அடித்தார். தீக்கொழுந்து ஜொலித்தது. ராக்ஷஸர்கள் ஹனுமனை விட்டுவிட்டு பயந்து ஓடினர். உடனே ஹனுமான் வீட்டின்மேல் ஏறினார். ஒவ்வொரு வீட்டிலும் தாவித்தாவி தீ வைத்துவிட்டார். வீடுகள் பற்றி எறியலாயிற்று. எங்கும் புகை சூழ்ந்தது. பல வர்ணமான அக்னி ஜ்வாலை ஆகாயத்தில் சுழன்றது. கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. எங்கும் சாம்பலாயிற்று. காற்று வேகமாய் வீசிற்று. மரங்கள் சடசட என்று சப்தம் கேட்டது. அரக்கர்கள் அலறிக்கொண்டு பயந்து ஓடினர். தங்கள் பந்துக்களையும் குழந்தை குட்டிகளையும் கையில் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடினர். தங்கள் வீடுகள் எறிவதையும் பிறர் வீடுகள் எறிவதையும் பார்த்துக் கொண்டே நின்றனர். நாற்புறமும் கடல் சூழ்ந்திருந்தும், யாரும் தங்கள் வீடுகளை அணைக்க முன்வரவில்லை. இராவணன் வேறு புது வீடு கட்டிக் கொடுப்பான் என்றிருந்தனர் போலும். அக்னி, வாயு, வருணன் யாவரும் ராவணனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ராவணனின் அதிகார பலம், தபோ பலம் ஏதும் இங்கு செல்லவில்லை. ராவணனும் தன் வீடு இழந்து மந்தோதரியுடனும் இந்திரஜித்துடனும் ஹனுமானின் ப்ரபாவத்தைப் பார்த்து சிந்தித்தவாறே செய்வதறியாமல் திகைத்து நின்றான். ஹனுமானுடன் யாரும் யுத்தம் செய்ய துணியவில்லை.

ஹனுமான் இவ்வாறு இலங்கை முழுவதும் பொசுக்கிவிட்டுத் தன் வாலில் இருந்த தீயை கடல் நீரில் அணைத்தார். பிறகு வாலை உதறினார். வாலில் ஒரு ரோமத்திற்கு கூட ஹானி ஏற்படவில்லை. இலங்கை முழுவதையும் பொசுக்கி சாம்பலாகிய தீ- தன் வாலில் ஒரு ரோமத்தைக் கூட கருக்காமல் இருப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டார். பிறகு சிந்திக்கலானார்.

மதுவனம் அழித்தல்

இலங்கை முழுவதும் அழிந்தபடியால் ஸீதை இருந்த அசோகவனத்திலும் தீ பரவி ஸீதையும் பொசுங்கி இருப்பாளே, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றபடி என்ன காரியம் செய்து விட்டேன்! இனி திரும்பிச் சென்று இராமனிடம் என்ன சொல்லுவேன்? முன் ஆலோசனை இல்லாதவன் முட்டாள் என்பது எனக்கே பொருத்தமாயிற்றே. அந்தோ! என்று வருந்தினார் ஹனுமான். அந்த சமயம் ஆகாயத்தில் செல்லும் சாரணர்கள், என்ன ஆச்சர்யம்! இலங்கையே அழிந்தும், ஸீதை உள்ள அசோகவனம் அழியவில்லை” என்று பேசிக்கொண்டு போனதைக் கேட்டு ஆனந்தமடைந்தார். உடனே சீதையைக் காணவே அசோகவனம் ஓடினார். ஸீதையைப் பணிந்து அவள் சௌக்யமாய் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இராமபிரானை சீக்கிரமே அழைத்து வருவதாகச் சொல்லி சீதையிடம் விடைபெற்றார்.

பிறகு ஹனுமான் ஆகாயமார்கமாகப் புறப்பட்டார். “ஜயத் யதி பலோராம:” என்று வெற்றி முழக்கத்துடன் வந்தார். இந்த முழக்கத்தைக் கேட்ட மற்ற வானரர்கள் இந்தக் கரையிலேயே நின்று கொண்டு அன்ன ஆஹாரமின்றித் தவம் செய்து கொண்டிருந்தனர் அல்லவா! ஹனுமானைக் கண்டு மற்ற வானரர்கள் குதூஹலமடைந்தனர்.

ஹனுமானுக்கு ஒரு மரத்தின் கிளையை முறித்து ஆசனமாகப் போட்டனர். அதில் ஹனுமான் அமர்ந்ததும் , ஹனுமனை மலர்களால் பூஜித்தனர். காய்கனிகளை சமர்ப்பணம் செய்தனர். போய்வந்த விஷயங்களைக் கேட்டனர். ஹனுமானும் பணிவுடனும் பொறுமையுடனும் கிளம்பியது முதல்– கடல் தாண்டியது, சீதையைத் தேடியது, அசோகவனத்தில் ஸீதையைப் பார்த்தது, கணையாழியைக் கொடுத்தது, சூடாமணியைப் பெற்றது, இராவணனை சந்தித்தது, இலங்கைக்குத் தீ வைத்தது முதலான சகல வ்ருத்தாந்தங்களையும் விரிவாக உரைத்தார். வானரர்கள் அதைக்கேட்டு வியப்படைந்தனர். ஹே வாயுகுமாரா! உமக்கு ராமபிரானிடம் இத்தகைய பக்தி இருக்கிறது ஆச்சர்யம்.! எங்கள் யாவர்க்கும் உயிர் அளித்தீர் என்று புகழ்ந்தனர்.

ஹனுமனோ தற்புகழ்ச்சியை விரும்பவில்லை. என்னைப் புகழ்வதைவிட சீதா பிராட்டியை புகழ வேண்டும். அவளை போன்ற தெய்வமே கிடையாது. அவள் கற்புக்கரசி. தன் கற்பின் பெருமையால் அவள் உலகையே பொசுக்கி மற்றொரு உலகையும் படைக்க வல்லவள். இராவணன் அவளைத் தொட்டும் கூட பொசுங்கவில்லேயே. இராவணனும் சாமான்ய ஜீவன் இல்லை. அவனும் தவ வலிமை உடையவன். சீதையைப் பற்றி இராமனிடம் தெரிவிப்போம் வாரீர் என்றார். இதை கேட்ட வானரர்கள் “ஆஞ்சனேய, அசோகவனத்தில் சீதா இருப்பது தெரிந்துவிட்டதால் நாம் இலங்கைக்கு சென்று, ராவண சம்ஹாரம் செய்து, இங்கு சீதையைக் கொண்டு வந்து இராமனிடம் சேர்ப்போம் என்று குதூஹலம் செய்தனர்”. ஹனுமானோ, “நாம் தூதர்களாக இருப்பதால் சொன்ன காரியத்தைச் செய்து அனுப்பியவர்களிடம் வந்து தெரிவிக்க வேண்டியது தான் முக்கியம். பிறகு எப்படி உத்தரவு கிடைக்கிறதோ அப்படி செய்யலாம்” என்று கூறினார். பிறகு யாவரும் கிஷ்கிந்தையை நோக்கி புறப்பட்டனர்.

போகும் பாதையில் மதுவனம் என்றொரு தோட்டம் உள்ளது. அது சுக்ரீவ மஹாராஜனுக்கு சொந்தமானது. அதில் பலவிதமான மது தயார் செய்து மரங்களில் பரிபாலிக்கப்பட்டிருந்தது. இந்த தோட்டம் எல்லா வானர்களுக்கும் முன்னமேயே தெரியும். ஆயினும் இதில் சுக்ரீவனுடைய உத்தரவில்லாமல் நுழைய முடியாது. இதற்கு காவல் ததிமுகன் என்ற வானரவீரன். சுக்ரீவனிடம் உள்ள பயத்தினால் வானரர்களுக்கு மதுபானத்தில் சபலம் இருந்த போதிலும் இதனுள் பிரவேசிக்காமல் இருந்தனர்.

இப்போது சீதையைப் பார்த்து விட்டோம். இனி நாம் என்ன செய்தாலும் சுக்ரீவன் கேட்க மாட்டார் என்று துணிந்தனர். இளவரசனான அங்கதனும் அனுமதித்து விட்டான். உடனே எல்லா வானரர்களும் உள்ளே புகுந்து தங்கள் இஷ்டப்படி மதுபானம் செய்தனர். ததிமுகன் தடுத்துப் பார்த்தான். இவர்கள் அடங்கின பாடில்லை. எனவே சுக்ரீவனிடம் தெரிவிக்க சென்று விட்டான். மது உண்டு வானரர்கள் சுயநினைவு நீங்கி கோலாஹலம் செய்தனர். இவர்களோ ஸ்வபாவத்திலே வானரர்கள். மதுவும் குடித்துவிட்டனர். கேட்கவும் வேண்டுமோ? ஹனுமான் மட்டும் மதுபானம் செய்யவில்லை.

“ராம நாம மதூணி பிபந்தம்” என்று சொல்லியபடி தனித்து அமர்ந்து ராமநாமமாகிய மதுவை ருசி பார்த்திக் கொண்டிருந்தார். ஓடிய ததிமுகன் சுக்ரீவனிடம் வந்து, வானரர்கள் மதுவனத்தை அழித்ததையும், தன்னை அடித்ததையும் தெரிவித்தான். சுக்ரீவன் இதனால் மகிழ்ச்சி அடைந்தான் . தவிர வருத்தமடையவில்லை. நிச்சயமாய் இவர்கள் ஸீதையைப் பார்த்து வந்திருக்கின்றனர். இல்லாவிடில் இவ்வளவு துணிவு வந்திருக்காது என்று இராமனிடம் தெரிவித்தான். ஹனுமானைத் தவிர வேறு யாரும் பார்த்திருக்க முடியாது என்றும் கூறினான். உடனே ததிமுகனைப் பார்த்து அந்த வானரர்களை உடனே இங்கு வரச் சொல்லு என்று அனுப்பிவிட்டான்.

ததிமுகன் மதுவனம் வந்து சுக்ரீவனின் உத்தரவை தெரிவித்தான். அது கேட்டு வானரர்கள் உடனே துள்ளி எழுந்து ஆகாயமார்கமாகக் கிளம்பி சுக்ரீவன் இருக்குமிடத்திற்கு வந்தனர். மது மயக்கத்திலும் கூட வானரர்களுக்கு தன் தலைவனிடம் இருந்த மதிப்பு போற்றத்தக்கது.

சூடாமணி பிரதானம்

அவ்வளவு வானரர்களும் சுக்ரீவனையும் ராமனையும் வணங்கி “கண்டோம் சீதையை” என்று கூவினர். சீதையைக் கண்ட கதையைச் சொல்லும்படி ராமன் கேட்க, சீதையைக் கண்ட ஹனுமானை முன்னடி நிறுத்தினர். ராமன் ஹனுமனை வெகுமதிப்புடன் சீதையின் கதையைத் தெரிவிக்கும்படி சொன்னார்.

ஹனுமான் உடனே சீதையின் திசை நோக்கி சேவித்தார். அவள் பெருமை வாயால் சொல்லி மாளாது என்றும் அவன் வணங்கக் கூடிய தெய்வம் என்றும் காட்டினார் போலும். தன் பெருமை ஏதும் இங்கு சொல்லாமல் சீதை அசோகவனத்தில் நித்ய உபவாசத்துடன் தவமியற்றுவதையும், தான் மோதிரம் கொடுத்ததையும், சீதையுடன் பேசியதையும், ஒரு மாதத்திற்குள் ராமன் வராத போனால் சீதை உயிர்தரிக்கமாட்டேன் என்று சொன்னதையும் தெரிவித்து அவள் தந்த சூடாமணியைத் சமர்ப்பித்தார் .

அந்த சூடாமணியைப் பெற்றுக் கொண்ட இராமர் அளவுகடந்த ஆனந்தமடைந்தார். தன்  மார்பில் வைத்துக் கொண்டார். பிறகு அதையே பார்த்து சீதையை அடைந்து விட்டதுபோல் மகிழ்ச்சி அடைந்தார். இன்னும்  ஒரு மாதம் உயிர் தரிப்பேன் என்று சீதை சொன்னாலே அவள் மிகவும் தைரியசாலி! சுக்ரீவா! இனி எனக்கு ஒரு கணம் கூட சீதையை பாராமல் இருக்க முடியாது. இப்போதே இலங்கையை நோக்கி வானரப்படையுடன் புறப்படுவோம் என்றார் . மறுபடியும் மறுபடியும் சீதையைப் பற்றியே ஹனுமானிடம் கேட்டார். ஹனுமானும் அலுக்காமல் சளைக்காமல் சீதையின் புகழை சொல்லி இராமனைத் தேற்றினார். ஹனுமானிடம் அவருடைய பேருபகாரத்திற்கு கைம்மாறு இல்லை என்று கருதி ராமன் கண்ணீர் விட்டார்.

லக்ஷ்மணனைப் பார்த்து இராமர் சொல்லலானார். லக்ஷ்மணா! மறுபடியும் என் மனம் கஷ்டப்படுகிறது . சீதையைக் கண்டுபிடித்தாகி விட்டது. உயிரோடு, தவம் செய்து கொண்டு இருக்கிறாள். இனி ராவணன் சம்ஹாரம் செய்து, அவளை மீட்பேன், திரும்பி அயோதிக்குச் சென்று அரசாளுவேன். என்னுடைய எல்லா துயரமும் தீர்ந்து விடும் காலம் நெருங்கிவிட்டது. ஆனால் என் மனம் இந்த ஹனுமானுக்கு என்னதான் கைம்மாறு செய்ய முடியும்? என்று தவிக்கிறது. இந்த துயரத்திற்கு பரிஹாரமே இல்லை.

நான் நாட்டையும் நாட்டு மக்களையும் பிரிந்த துயரத்தைவிட, தசரதன் இறந்துபோன துக்கத்தைவிட, சீதையை பறிகொடுத்த துக்கத்தைவிட, ஜடாயு மாண்டுபோன துக்கத்தைவிட, ஹனுமானுக்கு கைம்மாறு செய்ய முடியாமல் போன துக்கம் பெரிதாக வாட்டுகிறது. ஹனுமான் விஷயத்தில் நான் கடனாளியானேன். ஏழையேன் நான் என்ன செய்ய முடியும்? நான் கோடீஸ்வரனாக இருந்தால் ஹனுமானுக்கு பொன்னாடை சாத்தி, ரத்னமாலை அணிவித்து, கனகாபிஷேகம் செய்வேன் அல்லது நான் பித்ரு ராஜ்யத்தை அடைந்த பிறகு ஹநுமானுக்கு பட்டாபிஷேகம் செய்து நான் சேவகனாகி விடுவேன். அல்லது இந்திரப்பட்டதிலோ ப்ரஹ்மபட்டத்திலோ வைகுண்ட பதவியோ கொடுத்து விடுவேன். எதைச் செய்தாலும் அவனுக்கு தக்க கைம்மாறு ஆகாது. சீதையை பிரிந்து தவிக்கும் எனக்கு “கண்டேன் சீதையை” என்ற அமிர்த வார்த்தையை கூறி இவன் சமயத்தில் செய்த உபகாரம் இவ்வுலகத்தில் சக்கரவர்த்தி பதவியைக் காட்டிலும், இந்திரபதவியை காட்டிலும், ப்ரஹ்மபதவியைக் காட்டிலும், வைகுண்டபதவியைக் காட்டிலும் பெரிது. ஹனுமானுக்கு ஒரு கல்யாணமாகி, அவளும் சீதையை போல் உத்தமியாக இருந்து, கைதவறிப்போய் ஹனுமானும் என்னைப்போல் கலங்கி நிற்க நான் தேடிக் கண்டுபிடித்து தந்தாலன்றி இந்த கடன் அடையாது., ஆனால் நித்ய ப்ரஹ்மச்சாரியான ஹனுமானுக்கு திருமணம் ஆவதோ சீதையை போல் மனைவி கிடைப்பதோ அரிது! எனவே இந்தக் கடன் அடைக்க வாய்ப்பே கிடையாது. கிடைத்த போதிலும் நான் படும் இந்த கஷ்டம் என் பக்தனுக்கு ஒருக்காலும் வரவே வேண்டாம். நான் இவனுக்கு கடனாளியாகவே இருக்கிறேன் என்றார்.

பிறகு மனம் தாளாமல் எதற்கும் இந்த ஆலிங்கனம் ஒன்றே ஹனுமானுக்கு இந்த நிலைமையில் ஸன்மானமாக இருக்கட்டும் என்று தழுவிக் கொள்ள எழுந்தார். இராமபிரானுடைய திருமேனி தீண்டி ஆலிங்கனம் பெறுவதற்கு தனக்கு தகுதி இல்லை என்று கருதி ஹனுமான் விநயத்துடன் பின் சென்றார். ராமனோ ஹநுமானை இழுத்துக் கட்டிக் கொண்டார். காலத்தை மதிக்காத ராமபிரான் ஹனுமானுக்கு கைம்மாறு செய்யமுடியாத நிலையை தனக்கு கஷ்டகாலமாக நினைத்தார். இந்த ஆலிங்கனம் உனக்கு சர்வஸ்வமானது என்றார். அதாவது “என் அயோத்தி ராஜ்யம், திரிபுவன ஐஸ்வர்யம் , இந்திரப்பட்டம், ப்ரஹ்மப்பட்டம், வைகுண்டம், சீதை லக்ஷ்மணன் பரதன் ஷத்ருகுணன் முதலிய பரிவாரம், சுக்ரீவன் முதலிய பக்தர்கள் யாவருடன் இந்த என் ராமஸ்வரூபமே உனக்கு சொந்தம்” என்று அளித்து விட்டார் போலும். இனி யாருக்காவது ராமன் வேண்டுமானால் ஹனுமத் கிருபையால் தான் பெறவேண்டும் என்று ஆக்கிவிட்டார் போலும். தனக்கு விஸ்வாமித்திரரால் அளிக்கப்பட்ட “மஹாத்மா” என்ற பெயரையும் ஹனுமானுக்கு அளித்து விட்டார். இவ்வளவு சொல்லியும் ஏதும் கைம்மாறு செய்ய சக்தியில்லையே என்று கண் கலங்கி நின்றார். இராமபிரானின் கருணையைப் பார்த்து ஹனுமானும் கண்கலங்கி நின்றார். இந்தக் காட்சியைக் கண்ட லக்ஷ்மணன், சுக்ரீவன் முதலியவர்ககள்  கண்கலங்கி நின்றனர். பகவான் எவ்வளவு க்ருபை செய்தாலும் போதவில்லை என்று தூஷிக்கின்றவன் பக்தனாக மாட்டான். பக்தன் செய்கிற பூஜையில் குறை பார்க்கும் அல்ப தெய்வங்கள் தெய்வமாகாது  . தெய்வத்தின் கருணையை நினைத்து பக்தன் கண்ணீர் விடுவான் என்பதற்கும், பக்தனின் சேவையை நினைத்து தெய்வம் கண்ணீர் விடுவார் என்பதற்கும் இந்த காட்சியே போதுமான சான்று.

சுந்தர காண்டம் சம்பூர்ணம்

ஸ்ரீ சீதாராமனின் அயோத்தி விஜயம்

புஷ்பக விமானத்தில் ஏறிய இராமன் சீதையுடன் சேர்ந்து ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். மற்ற யாவரும் அவரவர் சௌகர்யப்படி அமர்ந்தனர். புஷ்பக விமானம் இராமன் அனுமதி பெற்று கிளம்பி விட்டது. வானரர்கள் விமானத்திலிருந்தபடியே கீழே பார்த்து ஆச்சர்யப்பட்டு “ஜெய் ஸ்ரீ சீதாராம்” என்று ஆரவாரம் செய்தனர்.

பஞ்சவடியிலிருந்து சீதையை இராவணன் தூக்கிச் செல்லும் போது சீதை அலறிக்கொண்டே சென்ற இடங்கள் இவை. மேலும் அவளுடைய துக்கக் கண்ணீரே வீழ்ந்த இடமாகிறது. எனவே இந்த தக்ஷிண தேசத்திற்கு க்ஷேமம் ஏற்படாது என்று நினைத்து இராமன் இவைகளை சீதைக்கு காட்டுகிற வ்யாஜத்தில் பாரததேசம் எங்கும் லட்சுமி கடாக்ஷம் படும்படி செய்கிறார். மேலும் இலங்கை இதுவரை ராவண ராஜ்யமாக இருந்தது. இன்று முதல் பக்தனான விபீஷண ராஜ்யமாக இருப்பதாலும் ஸ்ரீதேவியின் கடாக்ஷம் படும்படி செய்கிறார் போலும்.

ஸ்ரீராமன் சீதைக்கு அந்தந்த இடங்களைக் காண்பித்துக் கொண்டே சென்றார். ஸீதே! இதோ பார் சுவேல பர்வதத்தின் உச்சியில் பிரகாசிக்கும் லங்காராஜதானியை. இது நம் விபீஷணனின் ராஜ்யமாகும். “ஸீதே, இதோ பார். இது தான் ரணகளம். இந்த இடத்தில தான் ராவணவதம் நடந்தது. இங்குதான் இந்திரஜித் வதம் நடந்தது. மைதிலி! இதோ நான் போட்ட ஸேதுவைப் பார். வைதேஹி! இதோ என் தர்பசயனத்தைப் பார். இதில் கிடந்து மூன்று நாட்கள் வருணனைக் குறித்து தவம் செய்தேன். கல்யாணி! இதோ கிஷ்கிந்தை வந்து விட்டது பார்! என்றார். உடனே வானரர்கள் தலையை வெளியில் நீட்டி நீட்டி பார்த்து ஆரவாரம் செய்தனர். ஸீதை வானர பத்தினிகளையும் அழைத்துக்கொண்டு அயோதிக்குப் போகவேண்டுமென்று விரும்பவே, இராமனின் உத்தரவினால் கிஷ்கிந்தைக்கு வந்து விமானம் நின்று விட்டது. சுக்ரீவன் போய் வானர பத்னிகள் யாவரையும் அழைத்து வந்தான். இஷ்டப்படி ரூபம் எடுத்துக்கொண்டு வானரர்களும் வானரபத்னிகளும் தங்கள் குரங்கு ரூபங்களை விட்டு மனித ரூபங்களை தாங்கி விமானத்தில் ஏறிக் கொண்டனர். விமானம் மறுபடியும் ஆகாசமார்க்கமாய் புறப்பட்டது.

ராமன் சீதையைப் பார்த்து, “கல்யாணி! இதோ  பார் பம்பா ஸரஸை.! இங்கு தான் சபரி என்ற ஒரு தபஸ்வினி இருந்தாள். இதோ பார் பஞ்சவடியை! நாம் இருந்த ஆஸ்ரமத்தையும் கோதாவரியையும் பார் ஜானகி! இதோ பார் தண்டகாரண்யத்தை. அங்குள்ள ஆஸ்ரமங்களையும் பார் ஸீதே. அதோ பார் சித்ரகூடத்தை! இந்த சித்தரகூடத்தில் பரதன் வந்த இடத்தைப் பார். மைதிலி! இதோ பரத்வாஜ ஆஸ்ரமத்தைப் பார். அதோ கங்கை, யமுனை சரஸ்வதி கூடும் பிரயாகை தீர்த்தம்.  சீதை உடனே ப்ரயாகையும் பரத்வாஜ ஆஸ்ரமத்தையும் கண்டு கைகுவித்து வணங்கினாள். உடனே ராமன் பிரயாகையில் இறங்கி பரத்வாஜரை சேவித்துவிட்டு போக விரும்பினார். புஷ்பகம் ஆஸ்ரமத்தில் நின்றது. ராமன் சீதையுடனும் பரிவாரத்துடனும் வந்து முனிவரை வணங்கினார்.  முனிவர் ஞானதிருஷ்டியாலேயே நடந்த விஷயம் எல்லாம் அறிந்திருந்தார். பரிவாரத்துடன் கூடிய ராமனுக்கு ஆதித்யம் செய்தார்.

உடனே ராமன் ஹநுமானைப் பார்த்து, பரதன் எந்த நிலையில் இருக்கிறான் என்றும், அவன் அபிப்ராயம் என்ன? என்றும் அறிந்து, அவனுக்கு தான் வரும் செய்தியை தெரிவிக்கும்படி கூறி அனுப்பினார்.

நந்திக்ராமத்தில் பரதன் பரிதவித்துக் கொண்டிருந்தான். நாட்களை எண்ணித் துடித்துக் கொண்டிருந்தான். அக்னி பிரவேசம் செய்து உயிரை விடவும் தயாராக இருந்தான். யாவரும் பரதனை சூழ்ந்து செய்வதறியாமல் வருந்திக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஹனுமான் தோன்றி ராமபிரான் வருகிறார் என்று கூறினார். இதைக் கேட்ட பரதன் உடனே ஹனுமானின் திருவடிகளில் விழுந்துவிட்டார். ஐயனே! உம்மைவிட எனக்கு உபகாரி இல்லை. “என் பிரபு வருகிறார்” என்று சொன்னீரே! நீர் தெய்வமா! உமக்கு என்னிடம் இவ்வளவு கருணையா! ராம விரஹம் தாளாமல் உயிரை விட்டுவிடக் கூட துணிந்த எனக்கு இராமன் வருகிறார் என்ற இந்த செய்தி அமுதம் போன்றது. உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? பூதானம், கோதானம், கன்யாதானம் எது வேண்டுமானாலும் செய்கிறேன் கேளும். உமக்கு கனகாபிஷேகம் செய்வேன். ஆனால் நீர் இவைகளை அனுமதிக்க வேண்டுமே! கஷ்டகாலத்தில் அவசரப்பட்டுக் கொண்டு உயிரை விட்டுவிடலாகாது. பொறுமையுடன் இருந்தால் மங்களம் உண்டாகும் என்பர். அது என் விஷயத்தில் உண்மை ஆயிற்று. இவ்வளவு நாட்கள் பொறுமையுடன் உயிரை சுமந்து வந்த எனக்கு ராமதர்சனம் ஆகப்போகிறது. ஆஹா! நானே பாக்கியவானானேன். என் தெய்வத்தின் நாமகீர்த்தனத்தை உம் வாயால் கேட்டேனே! என்ன ஆனந்தம்! அந்த பிரபு எங்கு வருகிறார்? எப்போது வருகிறார்? சுகமாய் இருக்கிறாரா? எல்லா கதையும் எனக்கு சொல்வீராக என்றான்.

உடனே ஹனுமான் பரதனுக்கு சகல ராம வ்ருத்தாந்தங்களையும் தெரிவித்தார். ராம கதையைக் கேட்டு மகிழ்ந்து பரதன் ஹனுமானே! நீர் ஆலோசிக்காமல் அவசரப்பட்டு என்னிடம் வந்து சொல்லிவிட்டீரா? ராமன் வருகிறாரா? வரவில்லையா? என்றார். பரதனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ஹனுமான், பரதா! அதோ பட்ட மரங்கள் எல்லாம் தரித்திருப்பதைப் பார். வற்று போன ஆறுகளில் தீடீரென ஸம்ருத்தியான தீர்த்ததைப் பார். இவையெல்லாம் ராமபிரானின் வருகைக்காக பரத்வாஜ முனிவரின் தவ வலிமையினால் செய்யப்பட்டது. இதோ ராமன் வந்து விடுவார். கவலைப்படாதீர் என்று பரதனைத் தேற்றினார்.

அதே சமயம் ஆகாயத்தில் புஷ்பக விமானம் தோன்றியது. புஷ்பக விமானத்தைக் கண்டதும் பரதன் வெகு ஆனந்தம் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பக விமானம் கிட்டே வந்து நின்றது. பரதனும் சத்ருக்னனும் விமானத்தின் உள்ளே அழைக்கப்பட்டனர். வெகு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாவைப் பார்த்து பரதன் அண்ணாவின் திருவடிகளில் வீழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். ராமன் அவனை எடுத்து ஆலிங்கனம் செய்து கொண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். பிறகு புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கினார். எல்லா வானரர்களும் விபீஷணாதிகளும் இறங்கினர்.

ராமனை கண்ட அயோத்தி மக்கள் “ஸ்வாகதம் தி மகாராஜா கௌசல்யா நந்தவர்தானா” என்று ஆரவாரம் செய்தனர். திரளாக மக்கள் கூட்டம் கூடியிருந்தனர். புஷ்பக விமானத்தை குபேரனிடம் அனுப்பிவிட்டு ராமன் பரதனைப் பின் தொடர்ந்தார். திருவடிகளில் பரதன் சமர்ப்பித்த பாதுகைகளை பூட்டிக் கொண்டார். பரதாஸ்ரமத்திற்க்கு வந்து ப்ரோஹிதரான வசிஷ்ட முனிவரை வணங்கினார். பிறகு முக்கியமானவர்கள் யாவரையும் குசலபிரஸ்னம் செய்தார். அதற்குள் சத்ருக்னன் ஜடாசோதனம் செய்யும் நாவிதர்களை அழைத்து வந்தான். நான்கு சகோதர்களும் ஜடையைக் களைத்துக்கொண்டு புண்ய தீர்த்தத்தில் நீராடினார். பிறகு தவ வேஷத்தைக் கலைத்துவிட்டு ராஜவேஷத்தைக் தரித்தனர். திவ்ய பீதாம்பரமும் பூஷணங்களும் சந்தனமும் கஸ்துரி திலகமும் அணிந்தனர். பிறகு ரதத்தில் சீதையுடன் ஏறி அமர்ந்தார் இராமர்.  பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் முதலியவர்கள் வெண்குடை சாமரம் முதலியவற்றை தாங்கி கூட சென்றனர். ஸுமந்த்ரர் சாரத்யம் செய்தார். லக்ஷக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். அயோத்தியின் நான்கு வீதிகளிலும் வளம் செய்து அரண்மனையில் புகுந்தார்கள். விபீஷணன், சுக்ரீவன் முதலியவர்களுக்கும் தனித்தனி அரண்மனைகளைத் தந்து உபசரிக்கும் படி சத்ருக்னனை நியமித்தார் ராமர். சத்ருக்னனும் அவ்வாறே செய்தார். இராமர் கௌசல்யை முதலிய தாய்மார்களை வணங்கினார். அவர்களும் இராமனை எடுத்து ஆலிங்கனம் செய்து கொண்டு உச்சி முகர்ந்து ஆசி கூறினர். யாவரும் ஓய்வு எடுத்துக்கொண்டனர். எல்லோரது மனமும் மிகவும் நிம்மதியடைந்தது.

ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்

கைகேயின் ஆனந்தத்தை வளர்க்கும் பரதன் சிரமேற் கைகுவித்து இராமனை வணங்கி ப்ரார்தித்துக் கொள்கிறான். அண்ணா, பெரிய பார வண்டியை ஒரு கன்றுக்குட்டி  மேல் பூட்டியது போல் இந்த அயோத்தியை என் வசம் ஒப்படைத்து சென்றீர். ஆனால் உமது பாதுகா ப்ரபாவத்தால் இது எல்லா விதத்திலும் பத்து மடங்கு அபிவிருத்தி அடைந்துள்ளது. நஷ்டம் ஏதும் இல்லை. இனி இந்த ராஜ்யத்தை தாங்களே ஏற்று நடத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றான்.

இதைக்கேட்ட கைகேயியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்ததாம். சொத்துக்கு ஆசை படாத தார்மிகனான புத்திரனைப் பெற்றோமே என்று உகப்படைந்தாள். இராமன் பட்டாபிஷேகத்திற்கு ஒப்புக்கொள்ளவே சத்ருக்னன் எல்லா ஏற்பாடுகளையும் செய்யலானார். நூற்றுக்கணக்கான தங்கக் குடங்களில் வானரர்கள் புண்யதீர்த்தங்களைக் கொணர்த்தனர். வசிஷ்டர் அவைகளை விதிப்படி வைத்து பூஜித்தார். பிறகு சீதா-இராமனை மங்கள வாத்யத்துடன் அழைத்து வந்தனர். சீதா-ராமர் சிம்ஹாசனத்தில் அமர்ந்தனர். பிறகு ஞான விருத்தரும் வயோவ்ருதிருமான வசிஷ்டர், மார்க்கண்டேயர் முதலிய முனிவர்கள் இராமனை ரத்னமயமான ஆசனத்தில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்தனர்.

அஷ்டவசுக்கள் இந்திரனை அபிஷேகம் செய்ததுபோல் அஷ்ட ரித்விக்குகளும், அஷ்ட மந்திரிகளும், அஷ்ட கன்னிகைகளும் இராமனை அபிஷேகம் செய்தனர். பிறகு வசிஷ்டர் முடி சூட்டினார். திவ்யமான வஸ்திரம், ஆபரணம், புஷ்பமாலை, சந்தனம் இவைகள் தரித்து ஸீதையுடன் மணிமகுடம் தாங்கி இராமன் பட்டாபிராமனாக எழுந்தருளினார். லக்ஷ்மணன் வெண்கொற்றக்கொடை பிடித்தார். பரதனும் சத்ருக்னனும் சாமரம் வீசினார்கள். ஹனுமான் திருவடிகளை பற்றினார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பல மங்கள வாத்தியங்கள் முழங்கின. முனிவர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசிக் கூறினர். உலகமே மங்களமடைந்தது.

  1. தேவேந்திரன் மிகவும் சந்தோஷமடைந்து வாயுதேவன் மூலமாய் ஒரு முத்து மாலையை இராமனுக்கு சன்மானமாக வழங்கினான். அந்த முத்து மாலையை இராமன் சீதைக்கு அளித்தார். சீதையும் அதை சற்று நேரம் தரித்தபிறகு அதை யாருக்கு சன்மானமாக வழங்கலாம் என்று நினைத்தாள். அதை குறிப்பாக அறிந்த இராமன்,” ஸீதே! யார் உனக்கு எல்லா விதத்திலும் இஷ்டமானவரோ, புத்தியிலும் பலத்திலும் உபகாரத்திலும் தொண்டிலும் பக்தியிலும் யார் சிறந்தவரோ அவருக்கு கொடு என்றார்.

உடனே சீதாதேவி அதை ஹனுமாருக்கு பரிசாக அளித்தாள். அங்கு வந்திருந்தவர்களுக்கு தக்க சன்மானம் செய்தார் இராமன். விபீஷணனுக்கு ஸ்ரீரங்க விமானத்தை பரிசளித்தார். சுக்ரீவன், அங்கதன் முதலிய வானரர்களுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும் ரிஷிகளுக்கும் மற்ற அயோத்தியில் வாழும் பிரதானமானவர்களுக்கும் ஏராளமான ஸம்மானம் வழங்கப் பட்டது. வசிஷ்டர் முதலியவர்களுக்கு அவர்களுக்கு இஷ்டமான தானம் வழங்கப்பட்டது. பிறகு இராமன் லக்ஷ்மணனைப் பார்த்து யுவராஜ பட்டாபிஷேகம் செய்வதாக சொன்னார். அதற்கு லக்ஷ்மணன் சம்மதிக்காமல் போகவே பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்தார். பரதன் எதுவும் அண்ணா இஷ்டப்படி நடப்பவர்.

பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைவரும் இராமனிடம் விடைபெற்றுச் சென்றனர். இராமனிடம் மனத்தைக் கொடுத்து திரும்பிய அவர்கள் இராமனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். எங்கும் “ராமன், , ராமன் என்று யாவரும் ராமகதையைப் பேசிக் கொண்டிருந்தனர். இராமன் அரசாட்சியில் எங்கும் மங்களம் நிரம்பியிருந்தது. காலத்தில் மழை பொழிந்து நாடு செழித்தது. அதர்மம் ஒழிந்தது . தர்மம் ஓங்கியது. மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். ராமன் பல யாகங்கள் நடத்தினார். உலக க்ஷேமத்தைக் குறித்து எப்போதும் தான தர்மமே செய்து வந்தார்.

ஸ்ரீராமன் நாராயணன் அல்லவா? அவருடைய சரித்திரத்தை படிப்பதாலும் கேட்பதாலும் மக்களுக்கு குடும்ப விருத்தியும், தன தான்ய விருத்தியும், ஆயுள், ஆரோக்கியமும் சகல மங்களமும் உண்டாகும்.

ஜெய் ஸ்ரீ சீதாராம்

ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திர திருவடிகளே சரணம்

வால்மீகி மகரிஷி திருவடிகளே சரணம்

அஸ்மத் ஆசார்யர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்

ஸ்ரீ க்ரிஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

======================================================

Adiyen sincerely thank Smt.Malathy Kesavan, an advanced devotee who has handwritten the synopsis of Samshepa Sundarakandam in Tamil by listening to the nectarian upanyasam given by H.H.Sri.Krishnapremi Swamigal (SRI ANNA). 

Adiyen’s wife  made an attempt to type the same  electronically . Adiyen  is greatly indebted to her who is an inspiration for many devotees  for sharing the notes.  The entire reading would take about 60-90 minutes and can be recited daily.  Having benefitted by her writing, an attempt has been made to reproduce it in PDF for the benefit of many.

Adiyen Ramanuja dasan

 

 

6 thoughts on “SUNDARAKANDAM SYNOPSIS IN TAMIL FOR DAILY RECITATION BASED ON SRI.ANNA’S UPANYASAM

  1. Hari Om!
    Such a Kaviyam on the eve of Rama Navami is is a great attempt.Congrats to both your self ,& your Dharma pathni.
    Periavachan Pillais commentary on pull – grass , heard for the first time. Too enchanting & glorifying! If all our thoughts too are enhanced in such angles, its good both for our soul & body.
    _ All Glories to Sri Rama, Rama, Rama,
    Adiyen Ramanuja Dasyai

  2. Reblogged this on kazhiyur varadan's blog and commented:

    Adiyen sincerely thank Smt.Malathy Kesavan, an advanced devotee who has handwritten the synopsis of Samshepa Sundarakandam in Tamil by listening to the nectarian upanyasam given by H.H.Sri.Krishnapremi Swamigal (SRI ANNA).

  3. It just takes more than a lifetime to read your contributions! No words of praise can suffice. All we can do is allocate a portion of our time every day to enrich ourselves to read your soul stirring work! We are always eager to look forward to your contributions.

    Yours humbly
    Rajini @ https://rajinikanthv.wordpress.com

  4. நாளை மறுநாள் ஸ்ரீ ராமநவமி …ஆச்சார்யர்கள் சகிதம் ஸ்ரீ ராமலக்ஷ்மனர் பாரத சத்ருகன் ..அன்னை சீதாதேவி ..ஆஞ்சநேய சுவாமி அனைவரும் என் இல்லத்திற்கு வந்து விட்டனர்..இதைவிட வேறு கொடுப்பினை என்ன வேண்டும்..மிக்க நன்றி..நமஸ்காரம்.

  5. Hari Om!
    Varadan, May Adiyen know why you have stopped sending Divine Articles that Adiyen was enjoying to the core?
    Anyway this RAMAYANAM quenched Adiyen’s thirst! Keep sending more please.
    Jai Sri Ram! – Adiyen Ramanuja Dasan’
    Jai Sriman Narayana !

Leave a Reply